வட்டிக்கு பணம் தந்து ஏமாந்தால்.. முதல் கேஸ் ஏமாந்தவர் மீது தான்! வேலூர் சரக டிஐஜி வைத்த ட்விஸ்ட்!
வேலூர்: வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு வட்டி வரவில்லை, பணம் வரவில்லை என்று யாராவது புகார் அளிக்க வந்தால் புகார் அளிக்க வந்தவர் மீது தான் முதல் கேஸ் போடணும் என வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ட்விஸ்ட் வைத்துள்ளார்.
டிஐஜி முத்துசாமி வேடிக்கையாக இப்படி சொன்னதைக் கேட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சிரித்தாலும் அவர் கூறியதற்கான காரணம் சிந்திக்கும் படி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வட்டிக்கு பணம் கொடுத்து பிழைப்பவர்களுக்கு காவல்துறையினர் என்ன கலெக்ஷன் ஏஜெண்டா என்றும் ஏற்கனவே கொலை, கொள்ளை என பல முக்கிய வழக்குகளை விசாரிக்க வேண்டிய முக்கிய பொறுப்புகள் இருக்கும் போது இது போன்ற புகார்களை பெற்று பணிச்சுமையை அதிகரித்துக் கொள்ள வேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு டிஐஜி முத்துசாமி அட்வைஸ் அளித்தார்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து புகார் மனுக்களை பெற்ற வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, அதன் மீது உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். அப்போது பேசிய அவர், வட்டிக்கு பணம் கொடுத்து பிழைப்பவர்களுக்கு போலீஸ் தான் கிடைத்தோமா என ஆதங்கப்பட்டார். அதே வேளையில் பொதுமக்களை பாதிக்கும் எந்தவொரு விவகாரமானாலும் அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அவர் அறிவுறுத்தினார்.
வேலூர் காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் கொலை, கொள்ளை போன்றக் குற்றச்சம்பவங்களை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். டிஐஜி முத்துசாமியை பொறுத்தவரை காவல் நிலையங்களுக்கு திடீர் திடீரென்று சென்று ஆய்வு நடத்தக் கூடியவர். ஆய்வின் போது காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பதியப்பட்ட வழக்குகள் பற்றியெல்லாம் கேள்விக்கணைகளால் துளைத்தெடுப்பார்.












Click it and Unblock the Notifications