இது வக்பு நிலம்.. வேலூர் காட்டுக்கொல்லை கிராமத்தை காலி செய்ய மக்களுக்கு நோட்டீஸ்.. பெரும் பரபரப்பு
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள நிலம் வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமானது. இதனால் மக்கள் கிராமத்தை காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தர்காவுக்கு வரி கட்ட வேண்டும் என்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள நோட்டீஸால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை சமீபத்தில் நாடாளுமன்ற இருசபைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு நடுவே மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து 9 ம் தேதி முதல் வக்ஃபு சட்ட திருத்த மசோதா அமலுக்கு வந்துள்ளது.

இதற்கிடையே தான் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, தவெகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இப்படியான நிலையில் தான் தற்போது தமிழகத்தில் புதிய பிரச்சனை கிளம்பி உள்ளது.
அதாவது வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் காட்டுக்கொல்லை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 150 வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் விவசாய நிலங்கள் வைத்துள்ளனர். இப்படியான சூழலில் தான் சையத் அலி சுல்தான் ஷா என்பவர் பெயரில் கிராமத்தில் உள்ள மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள நிலஙகள் அனைத்தும் லோக்கல் தர்காவிற்கு சொந்தமானது. இதனால் இந்த நிலத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த நிலத்துக்கான வரியை தர்காவிடம் செலுத்தி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸால் அங்குள்ள மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த கிராமத்து மக்கள் கடந்த 4 தலைமுறைகளாக காட்டுக்கொல்லையில் வசித்து வருகின்றனர். இப்படியான சூழலில் திடீரென்று அந்த நிலம் தர்காவிற்கு சொந்தம். உடனடியாக காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் வரி செலுத்த வேண்டும் என்று கூறுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இதனால் அவர்கள் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட நில ஆவணங்களை எடுத்து கொண்டு இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மகேஷ் என்பவர் தலைமையில் சென்றனர். அரசு தலையிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். எங்களின் நிலத்தை யாரும் எடுத்து கொள்ள அனுமதிக்க கூடாது என்று கூறினர். இந்த விஷயத்தில் காலம் தாழ்த்தாமல் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதுபற்றி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த மகேஷ் என்பவர் கூறுகையில், ‛‛காட்டுக்கொல்லை கிராமத்தில் இந்த மக்கள் 4 தலைமுறையாக வாழ்ந்து வுருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடத்துக்கு அரசு வழங்கிய நில ஆவணங்கள் உள்ளன. சர்வே நம்பர் 330/1ன் கீழ் இருக்கும் நிலங்கள் வக்ஃபு நிலம் என சொல்லப்படுகிறது. இதில் அரசு தலையிட்டு மக்களுக்கு பட்டா வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்'' என்று கூறினார்.
தமிழகத்தில் இதுபோன்ற பிரச்சனை வருவது இது முதல் முறையல்ல. திருச்சி மாவட்டம் திருச்செந்தூரை கிராமம் வக்ஃபு நிலம் என்று கூறப்பட்டுள்ளது. 1,500 ஆண்டுகள் பழமையான சோழர் கால கோவில் உள்பட சுமார் 480 ஏக்கர் நிலம் வக்ஃபுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இது பிரச்சனையாக உள்ளது. இப்படியான சூழலில் தான் தற்போது திருச்செந்தூரை தொடர்ந்து வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் உள்ள நிலம் தர்காவுக்கு சொந்தமானது என்று மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications