1806ல் வெடித்த முதல் சுதந்திர போராட்டம்.. விடுதலைக்கு வித்திட்ட வேலூர் புரட்சி!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை நாம் பெருமையோடு கொண்டாடி வருகிறோம். சுதந்திரத்திற்கான போராட்டங்களில் அரசியல் தலைவர்களின் பங்கு எந்த அளவுக்கு முக்கியமானதோ, அதே அளவுக்கு உள்ளூர் மக்கள், மன்னர்களின் போராட்டமும் முக்கியமானது. இன்னும் குறிப்பாக சொல்வதெனில் 1806ம் ஆண்டு வேலூர் கோட்டையில் பிரிட்டிஷ் படையில் இருந்த இந்திய வீரர்கள் நடத்திய போராட்டம்தான் முதல் சுதந்திர போராட்டமாக உருவானது.

இந்தியா அடிப்படையில் ஒரு துணை கண்டம். இங்கு பல்வேறு இனம், மதத்தை சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். தென்னிந்தியா தொடர்ந்து மத ஒற்றுமையின் அடையாளமாக திகழ்ந்து வந்திருக்கிறது. தென்னிந்தியாவை ஆண்ட பல மன்னர்கள் மத ஒற்றுமையை போற்றி வந்திருக்கின்றனர். குறிப்பாக திப்பு சுல்தானின் ஆட்சியில் மத ஒற்றுமை சிறப்பாக இருந்திருக்கிறது.

Independence Day 2024 Independence Day

அவருடைய வம்சமே மத ஒற்றுமையை போற்றி வந்திருக்கிறது. திப்புவின் தந்தையான ஹைதர் அலி, ஒரு சாதாரண குதிரைப்படை வீரர். பின்னர் தன்னுடைய போர் திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, ஒரு கட்டத்தில் மைசூருக்கே மன்னராக மாறியிருக்கிறார். தமிழ்நாட்டில் வேலு நாச்சியாரை ஆங்கிலேயர்கள் சுத்துப்போட்டபோது, தன்னுடைய படையை அனுப்பி வேலு நாச்சியாருக்கு உதவியிருக்கிறார். இந்த வழியில் வந்த திப்புவுக்கு, ஹைதர் அலியை விட அதிகமாகவே ஆங்கிலேயர்களை எதிர்க்கும் துணிவு இருந்தது.

திப்பு இஸ்லாமியராக இருந்தாலும், இவருடைய அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளில் கிருஷ்ணா ராவ் எனும் இந்துதான் நியமிக்கப்பட்டிருந்தார். அதேபோல அஞ்சல் மற்றும் காவல்துறை அமைச்சராக சாமைய்யா ஐயங்கார், வருவாய் துறை அமைச்சராக பூர்ணையா ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவெனில், திப்பு விகிதாச்சார அடிப்படையில் நலத்திட்டங்களை வழங்கியிருந்தார்.

அதாவது, இஸ்லாமியர்களின் எண்ணிக்கையும், அவர்களின் வழிபாட்டு தலங்களின் எண்ணிக்கையும் இந்துக்களை விட குறைவு. எனவே கோயில்களை பராமரிப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட, இஸ்லாமிய மத வழிபாட்டு தலங்களை பராமரிக்க ஒதுக்கப்பட்ட தொகை குறைவு.

இப்படியாக இவரது ஆட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இருப்பினும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், காதுக்குள் நுழைந்த கட்டெறும்பாக குடைச்சல் குடைந்துக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ஆங்கிலேயர்களின் கை ஓங்கியதையடுத்து அவர்களுடன் போரில் நேருக்கு நேர் சண்டையிட்டு மாண்டுபோனார் திப்பு.

திப்புவின் ராணுவ படைபலம் மிகப்பெரியது. அதில், ராக்கெட் தொழில்நுட்பம் கூட இருந்தது. இவ்வளவு பெரிய படையை தோற்கடித்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு, இனி தங்களை எதிர்க்க ஆள் இல்லை என்று எண்ணம் தொற்றிக்கொண்டது.

இப்படி இருக்கையில்தான் 1806ல் அந்த சம்பவம் நடந்தது. அதாவது, ஸ்ரீரங்கப்பட்டண போரில் திப்புவை கொன்ற ஆங்கிலேயர்கள் அவர்களின் மனைவி, பிள்ளைகளை வேலூர் கோட்டையில் சிறை வைத்தனர். வேலூரில் தண்ணீருக்கு பஞ்சம்தான், மும்மாரி பொழியாது. இருந்தாலும் கோட்டையின் அகழியில் ஒரு நாளும் நீர் வற்றாது. பாதுகாப்புக்காக அகழியில் முதலைகள் கூட வளர்க்கப்பட்டன. கோட்டைக்கு உள்ளே செல்லவும், வெளியே வரவும் ஒரே வழிதான்.

பீரங்கிகளால் எளிதில் இதை உடைத்துவிட முடியாத அளவுக்கு பலம் வாய்ந்த சுவர்களை கொண்டது வேலூர் கோட்டை. எனவே இங்கு சிறை வைத்தால் நிச்சயம் தப்பிக்க முடியாது என பிரிட்டிஷ் அதிகாரிகள் கணக்கு போட்டனர். ஆனால், என்ன இருந்தாலும் இவர்களுக்கு காவல் இந்திய வீரர்கள்தான். பிரிட்டிஷ் படைகளின் எண்ணிக்கை குறைவு.

எனவே, பிரிட்டிஷ் படையில் இருந்த தமிழக, கர்நாடக சிப்பாய்கள் திப்புவின் வாரிசுகளுக்கு காவல் இருந்தனர். இருப்பினும் இவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். எண்ணிக்கையில் அதிகமாக இருப்பவர்களை கட்டுப்படுத்த கடுமையான விதிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும்போது, அதை பார்த்து மற்றவர்கள் பயந்து, விதிகளை சரியாக கடைப்பிடிப்பார்கள். இந்திய சிப்பாய்களுக்கும் இப்படி பயிற்சி கொடுக்கப்பட்டது.

வேலூர் கோட்டையில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்களில் கணிசமானோர் இஸ்லாமியர்களும் இருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களின் உரைகள் பன்றி கொழுப்பில் செய்யப்பட்டிருந்தது. இந்த உரைகளை பற்களில் கடித்துதான் கழற்ற வேண்டும். அதேபோல தடி வைத்துக்கொள்ளவும், மீசை வைத்துக்கொள்ளவும் கூட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே திப்புவை கொன்று, வாரிசுகளை சிறை வைத்திருந்தது, பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த இந்திய இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில் மத உணர்வுகளை மதிக்காமல் பிறப்பிக்கப்பட்ட மற்ற உத்தரவுகள் இந்த கோபத்தை கிளர்ச்சியாக வெடிக்க செய்தது.

அதாவது திப்புவின் கொலைக்கு பழிவாங்கவும், அவர்களின் வாரிசுகளை விடுதலை செய்யவும் கிளர்ச்சி செய்வது என முடிவெடுக்கப்பட்டது. மத உணர்வுகளை புண்படுத்தியதை எதிர்த்தும் கிளர்ச்சியில் பங்கேற்க மற்ற இந்திய சிப்பாய்கள் முன்னுக்கு வந்தனர். 1806ம் ஆண்டு ஜூலை மாதம் 14 தேதிகளில் கிளர்ச்சி நடக்க இருந்தது. ரகசிய திட்டம் என்னவெனில், பிரிட்டிஷ் படையின் ஆயுதங்களை கைப்பற்றுவது, அதைக்கொண்டு அவர்களை தாக்குவது, பின்னர் கோட்டையை கைப்பற்றுவது, உதவிக்கு மற்ற சிற்றரசர்களின் படைகளை நாடுவது என்பதுதான்.

ஆனால் இந்த ரகசிய திட்டம் வெளியில் கசியும் அபாயம் ஏற்பட்டுவிட்டது. எனவே திட்டமிட்ட தேதிக்கு முன்னர், அதாவது 1806ம் ஆண்டு ஜூலை மாதம் 10ம் தேதியே கிளர்ச்சியை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் இந்திய சிப்பாய்கள் ஆயுத கிடங்கை கைப்பற்றினார்கள். ஆயுதங்கள் இந்திய வீரர்களின் கைகளுக்கும் மாறியது.

ஊரே நிசப்தமாக இருந்த நேரத்தில் வெடி சத்தம் காதை பிளந்தது. கண்ணில் பட்ட எல்லா பிரிட்டிஷ் அதிகாரிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 மணி நேரத்திற்குள் எல்லாம் முடிந்தது. கோட்டையில் கிழக்கிந்திய கம்பெனியின் கொடி இறக்கப்பட்டு திப்புவின் கொடி ஏற்றப்பட்டது.

ஆனால், இந்த விஷயம் 16 கி.மீ தொலைவில் இருந்த ஆங்கில படைத்தளபதிக்கு சென்று சேர்ந்துவிட்டது. அங்கிருந்தது கோட்டையை நோக்கி வந்த ஆங்கிலேயே படைகள், கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொண்டே முன்னேறி கோட்டையை கைப்பற்றியது. ஜூலை 10ம் தேதிக்குள் கிளர்ச்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் 1000 பேர் என்றும், உயிருடன் பிடிப்பட்டவர்கள் 600 பேர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த 600 பேரையும் பிரிட்டிஷ் அதிகாரிகள் என்ன செய்யப்போகிறார்கள் என்று கேள்வி எழுந்தது. நாங்கள் என்ன செய்ய போகிறோம் என்பதை தெரிந்துக்கொள்ள கோட்டையின் முன் அடுத்த நாள் காலையில் கூடுங்கள் என்று அதிகாரிகள் மக்களுக்கு கூறினர். மக்கள் கூட்டம் கூட்டமாக அடுத்த நாள் காலை கோட்டையின் முன் கூடினர். பிரங்கிகள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டன.

அதன் வாயில் பிடிபட்ட இந்திய சிப்பாய்கள் கட்டப்பட்டனர். தீ பற்றவைக்கப்பட்ட அடுத்த நொடி பீரங்கி குண்டு சிப்பாய்களின் உடல்களை சிதறடித்துக்கொண்டு வெளியே வந்தது. கை, கால்கள், தலை, கண்கள் என இந்திய சிப்பாய்கள் துண்டு துண்டாக கொடூரமாக கொல்லப்பட்டனர்.

அன்று பிரிட்டிஷ் அதிகாரிகள் வென்றுவிட்டதாக நினைத்தனர். ஆனால் அதுதான் இந்தியாவின் முதல் சுதந்திர போராக மாறியது. ஆங்கிலேயர்கள் எந்த அளவுக்கு கொடூரமானவர்கள் என்பது அப்போது மக்கள் கண் முன்னே பார்த்தார்கள். பார்த்தவர்கள் மனதில் பயமில்லை, அவர்கள் உயிரிழந்த இந்திய சிப்பாய்களுக்காக வருந்தவில்லை, மாறாக சுதந்திர கணலை ஏந்தினார்கள். அது அடுத்தடுத்த ஆண்டுகளில் காட்டுத்தீயை போல பரவி பிரிட்டிஷ் ஆட்சியை ஓட வைத்தது.

ஒரு தியாகம்.. ஒரு முன்னெடுப்பு.. ஒரு தைரியம்.. இதுதான் சுதந்திரம் எனும் இலக்கை அடைய நமக்கு தேவை என்பதை உணர்த்திய சம்பவம்தான் 1806 சிப்பாய் புரட்சி. இந்த சுதந்திர தினத்தில் சிப்பாய் புரட்சியில் உயிர்நீத்த அத்தனை வீரர்களையும் நினைவில் ஏந்துவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+