மன்சூர் அலிகானுக்கு கிடைத்த சின்னம் என்னன்னு பாருங்க! இனி பலாப்பழம் வேலூரில் என்ன பாடுபடப் போகுதோ!?
வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பலாப்பழ சீசனில் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழமே சின்னமாக கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக கூட்டணி, என மும்முனை போட்டி நடைபெறுகிறது. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இவற்றிற்கு மத்தியில், பிரபலங்கள் சிலர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் களமிறங்கியுள்ளனர்.

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை தொடங்கியுள்ளார் மன்சூர் அலிகான். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முதலில் ஆரணி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதாக கூறியிருந்த அவர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயற்சித்து வந்தார். ஆனால், அதிமுக, மன்சூர் அலிகானுக்கு சீட் தர முன்வரவில்லை.
இதையடுத்து, தான் வேலூரில் போட்டியிடுவதாக அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாளிலேயே முதல் ஆளாக வேலூர் தொகுதிக்கான வேட்பு மனுவை மன்சூர் அலிகான் தாக்கல் செய்திருந்தார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை நடத்தி வந்தாலும், அதற்கு தேர்தல் ஆணையம் இன்னும் ஒப்புதல் அளிக்காததால் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
தேர்தல் சின்னமாக தனக்கு பலாப்பழம், கிரிக்கெட் பேட், லாரி உள்ளிட்டவற்றை கேட்டிருந்தார் மன்சூர் அலிகான். ஒருவேளை பலாப்பழம் சின்னம் கிடைத்தால் தலையில் வைத்துக்கொண்டு ஓட்டு கேட்கப் போகிறேன் என நகைச்சுவையாக மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார்.
மேலும், டார்ச் லைட் சின்னம் உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால் எனக்கு விளக்கு பிடிப்பதற்கு விருப்பமில்லை. அந்த சின்னம் வேண்டாம். அதிக வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். எந்தக் கட்சியையும் பார்க்காமல் அனைவரையும் விமர்சிப்பேன் எனக் கூறி இருந்தார் மன்சூர் அலிகான்.
இந்நிலையில், வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் வேலூர் தொகுதியில் மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பலாப்பழ சீசன் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், மன்சூர் அலிகானுக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு பரபரப்பைக் கிளப்பும் மன்சூர் அலிகான் வசம் பலாப்பழம் சிக்கி என்ன பாடுபடப்போகிறதோ என இப்போதே பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications