"ஆபரேஷன் டிரக்ஸ்".. போதைப் பொருள் தடுப்பு தீவிரம்... இரவில் வேலூர் கலெக்டர், எஸ்.பி. திடீர் சோதனை!
வேலூர் : ஆந்திராவிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வேலூர் மாவட்டம் வழியாக கடத்தப்படுவதை தடுக்கும் வகையில், வேலூரில், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைசாவடியில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கஞ்சா பயன்பாட்டை ஒழித்துக்கட்டும் வகையில் 'ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். எனினும் ஆங்காங்கே கஞ்சா கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

முதல்வர் அறிவுரை
கடந்த 11-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் போதைபொருள் கடத்தல், விற்பனையை தடுக்க முதலமைச்சர் அறிவுரை வழங்கியிருந்தார். முதலமைச்சரின் உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் கஞ்சாவை தடுக்கு தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எல்லையில் தீவிர கண்காணிப்பு
அந்தவகையில் வேலூர் மாவட்டத்தில், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. வேலூர் - ஆந்திர எல்லையியன ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் சாலைகளில் வி.கோட்டா, சயனகுண்டா, பரதராமி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, முத்தரசிகுப்பம் ஆகிய 5 இடங்களில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரவிலும் அதிரடி சோதனை
காட்பாடி அருகேயுள்ள கிறிஸ்டியான் பேட்டை என்ற தமிழக எல்லை சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் இரவில் திடீர் என வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆந்திராவிலிருந்து வரும் ஆந்திர அரசு பேருந்து தமிழக அரசு பேருந்துகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் சோதனை செய்தனர்.

வங்கிக் கணக்குகள் முடக்கம்
மேலும் போதை பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் பணம் ஏற்றும் 81 வங்கி கணக்குகள் இம்மாவட்டத்தில் முடக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனைகள் நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பேருந்து நடத்துநர்கள் ஓட்டுநர்களுக்கும் பொருட்கள் எடுத்து வருவதை கண்காணிக்க அறிவுறுத்தபட்டுள்ளது.

ரயில் பயணிகளிடமும் சோதனை
ரயில்வே போலீசாருடன் தமிழகம் போலீசாரும் சேர்ந்து ஆந்திரா குஜராத் போன்ற தமிழகம் வரும் ரயில்களை சோதனை செய்து தொடர்ந்து கஞ்சாவை பிடித்து வருகின்றனர். விடுமுறை நாட்களான வெள்ளி சனி,ஞாயிறு திங்கள் ஆகிய 4 நாட்கள் முழுமையான சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை தடுக்கும் வகையில், இரவில் மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் திடீர் சோதனை நடத்திய சம்பவம், பொதுமக்களுக்கு மட்டுமின்றி, காவல்துறைக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications