நெகிழ்ச்சி.. “குயில் 80 - அற்புதம் 75” பெற்றோருக்கு பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்த பேரறிவாளன்
திருப்பத்தூர்: ஜோலார்பேட்டையில் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் தனது பெற்றோர் அற்புதம்மாள் குயில்தாசன் ஆகியோருக்கு பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
Recommended Video
ஜோலார்பேட்டையில் அமைந்து இருக்கும் தனியார் திருமண வளாகத்தில் குயில் 80 அற்புதம் 75 என்ற தலைப்பில் பேரறிவாளன் தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒரே மேடையில் பிறந்தநாள் விழா கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து பேரறிவாளன் தாயும் தந்தையும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டு கேக் வெட்டி ஊட்டிக் கொண்டனர்.

சத்யராஜுடன் நடனம்
இந்த பிறந்தநாள் விழாவில் அலங்காநல்லூர் சமர் பறை இசை குழுவினரின் இசை முழக்க நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் பேரறிவாளனும் திரைப்பட நடிகர் சத்யராஜும் மேடையில் நடனமாடிய நிகழ்ச்சி அனைவரையும் ஈர்த்தது.

ராஜீவ் காந்தி கொலை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன். அவருடன் சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆயுள் தண்டனை
அனைவருக்கும் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது.

விடுதலை
இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை கோரிய வழக்கை கடந்த மே மாதம் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
