ரயில் கர்ப்பிணிக்கு கொடூரம்.. உலகைப் பார்க்காமலேயே உயிரை விட்ட கரு! அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றம்!
வேலூர்: வேலூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்தப் பெண்ணின் கருவில் இருந்த குழந்தையின் இதயத்துடிப்பு நின்ற நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. மேலும் பெண்ணுக்கு தண்டுவடம் கால் உள்ளிட்டவற்றில் பாதிப்பு இருக்கும் நிலையில் தொடர் சிகிச்சையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்திருக்கிறார். தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் தனது சொந்த ஊர் செல்வதற்காக நேற்று கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

நள்ளிரவில் இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்குச் சென்றபோது அங்கு அந்த பெண்ணுக்கு ஒரு இளைஞர் பாலியல் வன்கொடுமை கொடுத்திருக்கிறார். இதனால் அந்த கர்ப்பிணி சத்தம் போட்டதால் கோபமடைந்த அந்த நபர் கர்ப்பிணி என்றும் பாராமல் அந்த பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த நபர் காட்பாடி வந்ததும் ரயிலில் இருந்து இறங்கி தப்பி சென்றிருக்கிறார்.
படுகாயம் அடைந்த அந்தப் பெண் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண்ணை மீட்ட காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் ரயில்களில் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகள் தொடர்பான புகைப்படங்களை போலீசார் காண்பித்த போது குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞர் குறித்து அந்த பெண் அடையாளம் காட்டினார். இதை அடுத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் கேவி குப்பம் அருகே ஹேமராஜ் என்பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது ஏற்கனவே பல பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் உடல் நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறி இருந்தனர். சிகிச்சைக்கு பிறகு அவரை அவரது சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அதிர்ச்சி தரும் விதமாக அவரது கருவில் இருந்த சிசு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த நான்கு மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து பெண்ணின் வயிற்றில் இருக்கும் உயிரிழந்த கருவை அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர் இந்த நிலையில், பெண்ணின் வயிற்றில் இருந்த கரு சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சுமார் 30 நிமிடம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்தப் பெண் சீரான உடல் நலத்துடன் இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டபோது அந்த பெண்ணின் கை, கால், முதுகு தண்டுவடம் ஆகியவை பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சை காரணமாக உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே அந்த பெண்ணின் முழு மருத்துவ செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளதோடு, நிதி உதவியும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications