ரூ.40 கோடி ஜிஎஸ்டி கட்டுங்க.. திருப்பத்தூரில் 100 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு நோட்டீஸ்..எப்படி?
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கிராமத்தில் 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்ணுக்கு 40 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பெண்ணின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று அந்த பெண் கதறி அழுதார்.
உங்கள் ஆதார் கார்டு, பான் கார்டுகளை சட்டவிரோதமாக யாரும் பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சில நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி ஏய்ப்புக்காக அப்பாவி ஏழைகளின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை பயன்படுத்துகிறார்கள். இந்த விவகாரத்தில் சிக்காமல், யாரிடமும் பான் கார்டு, ஆதார்டு கார்டு போன்றவற்றை தரக்கூடாது.

ஆதார் கார்டு, பான்கார்டு, உங்களுக்கு வரும் ஒடிபி இந்த மூன்று மட்டும் போதும் உங்களுக்கு எப்படிப்பட்ட சிக்கல் வேண்டுமானாலும் வரலாம். அப்படித்தான் 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்ணுக்கு 40 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் மணி என்பவருடைய மனைவி மலர். இவருக்கு 54 வயது ஆகிறது. மலர் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
கூலி வேலை செய்து வரும் மலருக்கு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி விழுப்புரம் வணிக வரி துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில் டி.என். ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி ரூ.21 கோடியே 92 லட்சத்து 29 ஆயிரத்து 406 செலுத்த வேண்டும். மேலும் 2020, 2021 மற்றும் 2022 ஆகிய மூன்றாண்டின் சி.ஜி.எஸ்.டி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி. என இரண்டு ஜி.எஸ்.டி.க்கும் அபராதம் அதற்கு உண்டான வட்டி என சுமார் ரூ.40 கோடி செலுத்த வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மலர் இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மலர் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் பெயர் மலர்,நான் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வாழ்ந்து வருகிறேன். எங்களுக்கு இவ்வளவு பெரிய நோட்டீஸ் வந்துள்ளது.
எங்கள் வீட்டின் அருகே உள்ள மகளிர் குழுவில் எனது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கொடுத்து அவ்வப்போது நான் கடன் பெற்று வந்தேன். என்னுடைய ஆதார் மற்றும் பான் கார்டை தனியார் நிறுவனம் பயன்படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் எனக்கு வந்த நோட்டீஸ் தவறுதலாக வந்திருக்கலாம் என நினைத்து நான் பொருட்படுத்தாமல் இருந்துவிட்டேன்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் எனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க சென்றபோது எனது வங்கி கணக்கு வணிக வரித்துறையால் முடக்கப்பட்டிப்பதாக வங்கி அதிகாரிகள் கூறினார்கள்.. இதனால் இந்த நோட்டீஸ் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள்" இவ்வாறு கண்ணீர் மல்க புகார் தெரிவித்தார். இந்த 40 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications