ராணிப்பேட்டையில் ஷாக்.. வீடு புகுந்து 15 வயது சிறுமி குத்திக்கொலை! மற்றொரு சிறுமி படுகாயம்
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 15 வயது சிறுமி ஒருவர் மர்ம நபரால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை ஊர் மக்கள் மடக்கி பிடித்திருக்கின்றனர்.
சோளிங்கரை அடுத்த புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள வாரச்சந்தைக்கு பின் பகுதியில் உள்ள வீட்டில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுமி இருந்திருக்கின்றனர். இருவரும் உறவினர்கள். இந்நிலையில் இன்று மாலை கையில் கத்தியுடன் வீடு புகுந்த இளைஞர் சிறுமி 15 வயது சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இளைஞரின் பிடியிலிருந்து தப்பிக்க சிறுமி முயன்ற நிலையில், இளைஞர் மேலும் பலம் கொண்டு தாக்கியுள்ளார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சிறுமி உயிரிழந்திருக்கிறார். 16 வயது சிறுமி இளைஞரை தடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. இதனால் மற்றொரு சிறுமிக்கும் கத்தி குத்து ஏற்பட்டிருக்கிறது.
இதனையடுத்து சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரை சிறுமி அழைத்திருக்கிறார். ஊர் மக்கள் சேர்ந்த இளைஞரை துரத்தி பிடித்துள்ளனர். இரண்டு பேர் வந்ததாகவும், ஒருவரை மட்டுமே பிடிக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
கொலை ஏன் நடந்தது? சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு சிறுமியை முன்கூட்டியே தெரியுமா? பாலியல் வன்கொடுமை முயற்சியா? சொத்து பிரச்சனைக்கான பழிவாங்களா? முன் விரோதமா? என பல கோணங்களில் இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications