1 ஆடு.. வேலூரில் துளசி வீட்டில் ஒரே குஷி.. சுண்டியிழுத்த "ஜமுனாமுரி".. கிட்ட போய் பார்த்தால்.. அடடே
வேலூர்: விரைவில் ரம்ஜான் வருவதால், கால்நடை சந்தைகள் தமிழகத்தில் பிஸியாகியிருக்கின்றன. இதனால் வரும் நாட்களில் வியாபாரம் பெருகும் என்றும் விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை கால்நடை சந்தைகள் எப்போதுமே பிரசித்தி பெற்றவை.. இதுமாதிரியான கால்நடை சந்தைகள்தான், கிராமப்புற விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக கைகொடுத்து உதவி கொண்டிருக்கிறது.

சந்தைகள்: அந்தவகையில், வாரா வாரம் அல்லது மாத மாதம் கால்நடை சந்தைகள் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ஆட்டுச்சந்தையாகட்டும், நெல்லை மேலப்பாளையம் சந்தையாகட்டும், வேலூர் கேவி குப்பம் சந்தையாகட்டும், ஆடுகளை வாங்குவதற்காகவே பொதுமக்கள் இந்த சந்தைகளுக்கு திரண்டுவருவார்கள்..
பண்டிகை காலத்தில் கூடும் கால்நடை சந்தைகளில், விற்பனைகள் அதிகமாகி வியாபாரிகளை மகிழ்ச்சிக்குரியதாக்கிவிடும். முக்கியமாக, செம்மறி ஆடு, வெள்ளாடுகள் என்று பலவகையான ஆடுகளை வியாபாரிகள் கொண்டு வருவார்கள்.. எப்போதுமே, இதுபோன்ற கால்நடை சந்தைகளில் வெள்ளாடுகளுக்குதான் அதிக கிராக்கி இருக்குமாம்.
வெள்ளாடுகள்: ஒவ்வொரு வெள்ளாடுகளின் உயரம், கறியின் அளவு, எடையை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும்.. அந்த வெள்ளாட்டின் கறியின் எடை அதிகமாக இருந்தால், அதற்கேற்ற விலையும் கணிசமாக உயர்த்தி விற்பது வாடிக்கையாகும்..
வெள்ளாடுகள் தவிர, கிடாய்கள், நாட்டு ரக கிடாய்கள், கசையாடுகள், செம்மறி ஆடுகள் என ரகங்கள் கொண்ட ஆடுகள் அதிகம் விற்பனையாகும்.. ஆட்டுக்குட்டிகள்கூட, 3,500 முதல் ரூபாய் 5ஆயிரம் வரையில் விற்பனையாகிவிடுவதால், வியாபாரிகள் இந்த கால்நடை சந்தைகளை அதிகம் நம்பியிருக்கிறார்கள்.
அமோக விற்பனை: இந்நிலையில், விரைவில் பக்ரீத் பண்டிகை வரப்போகிறது.. இதனால், கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரமும் அமோகமாக நடைபெற்றிருக்கிறது. காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது இந்த கால்நடை சந்தை..
ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த கால்நடை சந்தை கூடுவது வழக்கமாகும்.. நேற்றும் அப்படித்தான் சந்தை கூடியது.. அண்டை மாநிலமான கர்நாடகா, ஆந்திரா உப்டபட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான ஆடுகளை லோடு வேன் மூலம் விவசாயிகள் ஏற்றி வந்தார்கள்.
பிறகு போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகள் விற்பனை ஆரம்பமானது.. வெள்ளாடுகள், முத்து கிடாய் ரகங்கள், நாட்டு ரக கிடாய்கள், செம்மறி ஆடுகள் என்று ஆடுகள் ரகம் ரகமாக விற்பனையாயின.. சில ஆடுகள் விலை ரூ50 ஆயிரம், ரூ.1 லட்சம் என்று விலை போயிருக்கிறது. வரும் திங்கட்கிழமை ரம்ஜான் வருவதால், "ஜமுனாமுரி" ரக ஆடுகள் நேற்றைய தினம் கால்நடை சந்தையில் அதிகம் காணப்பட்டதாம்... ஒரு ஆடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையாகியிருக்கிறது.
செம்மறி ஆடு: அதேபோல, தொண்டான் துளசி என்ற கிராமத்தை சேர்ந்த தரணி என்பவர், தன்னுடைய செம்மறி ஆட்டினை விற்க வந்துள்ளார்.. இந்த செம்மறி ஆட்டுக்கு ஏகப்பட்ட போட்டி நடந்தது..
நீண்ட நேரமாக வியாபாரிகள், இந்த செம்மறி ஆட்டினை வாங்க பேரம் பேசினார்கள்.. இறுதியில், இந்த ஒரு ஆடு ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. சென்னையை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் இந்த ஆட்டினை 1 லட்சத்து 48 ஆயிரத்துக்கு வாங்கிக்கொண்டு போனாராம்.. நேற்றிலிருந்து இப்போதுவரை இந்த செம்மறி ஆடு விலைபோனதுதான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மொத்தத்தில், ஆட்டுச்சந்தையில் நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. சிறிய ரக ஆடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், பெரிய ரக ஆடுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும் விலை போனது. இந்த சந்தையில், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இந்த வாரம் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகமாகியுள்ளதாக கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தென்காசி: வேலூர் போலவே மற்ற மாவட்டங்களிலும் ஆடுகள் விற்பனை களைகட்டியிருக்கிறது.. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பிரசித்திபெற்ற பாம்புக் கோவில் ஆட்டுச் சந்தையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனையாகும்..
கடந்த சில நாட்களாகவே குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்த நிலையில், தற்போது விற்பனை பெருகியிருக்கிறது.. இதனால் நீண்ட நாட்களுக்குபிறகு பாம்புக் கோவில் ஆட்டுச்சந்தையில், ரூ.4 கோடி வரை விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நம்பிக்கை: வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால், பெருமளவு ஆடுகள் விற்பனையாக துவங்கியிருக்கிறது.. முஸ்லீம்கள் குர்பானி கொடுப்பது வழக்கமாகும்.. தங்கள் உணவின் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடுப்பதும் சிறப்பு அம்சமாகும்.. இதற்காகவே ஆடுகள் வாங்க பல்வேறு பகுதிகளிலிருந்து கால்நடை சந்தைகளில் குவிந்து வருவதால், வியாபாரிகள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications