1 டிஎம்சி முடியாது.. 8,000 கன அடிநீர்தான்.. காவிரியில் கர்நாடகா அடம்! உச்சநீதிமன்றம் போகும் தமிழகம்!
வேலூர்: தமிழ்நாட்டுக்காக காவிரி நீரை திறந்துவிட மறுத்து கர்நாடகா மாநில அரசு தொடர்ந்து அடம்பிடித்து வருகிறது. கர்நாடகாவின் இந்த பிடிவாதத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்று தீர்வு காண்போம்; உச்சநீதிமன்றத்தின் கைகளில்தான் இறுதி முடிவு உள்ளது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு நாள்தோறும் 1 டிஎம்சி அதாவது 11,500 கன அடி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என்பது காவிரி நிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரை. ஆனால் இதனை கர்நாடகா ஏற்க மறுத்துவிட்டது.

கர்நாடகா அனைத்து கட்சிக் கூட்டம்: கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக அம்மாநில அரசியல் கட்சிகளின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், தமிழ்நாட்டுக்கு போதுமான காவிரி நீரை திறந்துவிட்டுவிட்டோம். 11,500 கன அடிநீரை திறந்துவிட முடியாது. அதிகபட்சம் 8,000 கன அடிநீரை திறந்துவிடுகிறோம் என கூறியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ராமதாஸ் கண்டனம்: கர்நாடகாவின் இந்த முடிவு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பேரிடியாக இருந்தது. இதனையடுத்து காவிரி நீரைப் பெற தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளில் நேற்றிரவு நிலவரப்படி நீர் இருப்பு 77 டி.எம்.சி ஆகும். இது நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவில் 68% ஆகும். அதுமட்டுமின்றி, நேற்றைய நிலவரப்படி நான்கு அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 36,221 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணைக்கு தினமும் 3.15 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கிடைக்கும் நிலையில் அதிலிருந்து ஒரு டி.எம்.சி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட கர்நாடக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.
உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும்: கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அடுத்த இரு நாட்களுக்குள் கூட்டி, தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அதையும் கர்நாடகம் மதிக்காவிட்டால், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அமைச்சர் துரைமுருகன்: இந்த நிலையில் வேலூரில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரியில் 1 டிஎம்சி நீரைத்தான் திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் 1 டிஎம்சி நீரைக் கூட தர முடியாது, 8,000 கன அடி நீரைத்தான் தருவேன் என்கிறது கர்நாடகா. கிருஷ்ணராஜ சாகர் அணையில் 105 அடியும் கபினியில் 64 அடியும் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் காவிரி நீரை கர்நாடகா தர மறுக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் முறையீடு: இந்த பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அதாவது அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது உள்ளிட்டவை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். காவிரி பிரச்சனைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காண்போம். இந்த பிரச்சனையின் இறுதி முடிவு என்பது உச்சநீதிமன்றத்தின் கைகளில்தான் உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications