TVK: பாஸ் இல்லாத தவெகவினர் திடீரென தடுப்புகளை உடைத்து உள்ளே புகுந்ததால் பரபரப்பு.. விரட்டிய போலீசார்
வேலூர்: பாஸ் இல்லாமல் வெளியே நிறுத்தப்பட்டிருந்த தவெகவினர் திடீரென்று தடுப்புகளை உடைத்து கூட்ட அரங்குக்குள் புகுந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அத்துமீறியவர்களை போலீசார் விரட்டியடித்து வருகின்றனர். பாஸ் இருக்கும் 4900 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
வேலூர் மாவட்டத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரான விஜய் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதற்காக, இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டார்.

சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டுள்ள விஜய்யின் வாகனத்தை பின்தொடர காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்தது. எனினும், அவருடைய வாகனத்தை பார்த்த தொண்டர்கள் 'TVK TVK’ என முழக்கமிட்டு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் வருகையை முன்னிட்டு அவர் செல்லும் பாதை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க காலை முதலே நிர்வாகிகள் வருகை புரிந்துவரும் நிலையில், க்யூஆர் கோடு ஸ்கேன் மூலம் கூட்டம் நடைபெறும் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 4,900 நிர்வாகிகளும் நிழல் தரும் கொட்டகைக்குள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு கேலரியிலும் தண்ணீர் பாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 50 தனித்தனி கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மருத்துவ வசதிக்காக 25 மருத்துவர்கள் கொண்ட குழு, 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 100 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக சுமார் 900 போலீசார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் கூடுதலாக பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அகரம்சேரியில் நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், தவெக நிர்வாகிகள் சர்வீஸ் சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. விஜய்யை காண சாலை முழுவதுமே ரசிகர்கள் திரண்டுள்ளதால் அந்த பகுதி முழுக்க பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்க பாஸ் இல்லாத ஏராளமான தொண்டர்கள் 2 சக்கர வாகனம் பார்க்கிங் வழியாக போலீசாருக்கு தெரியாமல் வருவதாகவும் தகவல் எழுந்துள்ளது. நிர்வாகிகள் வலியுறுத்தியும் தொண்டர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவதால், பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.
பாஸ் இல்லாமல் வெளியே நிறுத்தப்பட்டிருந்த தவெகவினர் திடீரென்று தடுப்புகளை உடைத்து கூட்ட அரங்குக்குள் புகுந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அத்துமீறியவர்களை போலீசார் விரட்டியத்து வருகின்றனர். பாஸ் இருக்கும் 4900 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications