கண்ணீரை துடைத்த திருமாவளவன்.. காருக்குள் காவி உடையில் கதறி அழுதது யாரு பாருங்க.. வேலூரில் உருக்கம்
வேலூர்: வேலூரில் காவி நிற உடை அணிந்து காரில் அழுத முதியவரை பார்த்த தொல் திருமாவளவன் அவரது கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறிய வீடியோ வெளியாகி உள்ளது. சாமியார், மடாதிபதிகளிடம் நெருக்கம் காட்டாத திருமாவளவன் காவி உடை அணிந்த இந்த நபருக்கு ஆறுதல் கூறிய நிலையில் அவர் யார்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயலை கிளப்பியவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்ததோடு, அதில் அதிமுக பங்கேற்கலாம் என்றார்.

திருமாவளவன் தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் அவரது இந்த செயல்பாடு சர்ச்சையானது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேற திருமாவளவன் காய்நகர்த்துகிறாரா? என்ற கேள்விகள் எழுந்தது.
அதன்பிறகு திருவள்ளூரில் கடந்த 15ம் தேதி நடந்த விசிக மண்டல செயற்குழு கூட்டத்தில், ‛‛மது ஒழிப்பு கொள்கைக்காக திமுக கூட்டணியில் பாதிப்பு, விரிசல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக உள்ளது'' என்றார். இதுவும் பரபரப்பை கிளப்பிய நிலையில் மறுநாள் செப்டம்பர் 16ல் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை அவர் சந்தித்து பேசினார்.
இருவரும் தனிஅறையில் 10 நிமிடம் சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது திருமாவளவனை, முதல்வர் ஸ்டாலின் சமாதானம் செய்தார். இதனால் திருமாவளவன் தனது முந்தைய நிலைப்பாட்டில் இருந்து அந்தர் பல்டியடித்தார். அதுவரை மது ஒழிப்பு கொள்கையை தமிழகம் மற்றும் தேசிய அளவில் கொண்டு வர வேண்டும் என்று கூறி வந்த திருமாளவன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபிறகு தமிழகத்தில் மது விற்பனையை படிப்படியாக குறைக்க வலியுறுத்தியதாக கூறி நழுவினார்.
மேலும் திமுகவில் இருந்து ஆர்எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன் விசிகவின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக கூறி சென்றார். இதற்கிடையே தான் கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2ம் தேதி நடக்கும் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து விசிகவின் மண்ட சிறப்பு செயற்குழு கூட்டம் வேலூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.

இந்த வேளையில் காவி உடையில் கண்கலங்கிய ஒருவருக்கு அவர் ஆறுதல் கூறினார். அதாவது காவி உடை அணிந்து ஒருவர் காரில் அமர்ந்து இருந்தார். அவர் திருமாவளவனை பார்த்தவுடன் கண்கலங்கினார். இதையடுத்து திருமாவளவன் அவர் அருகே சென்று அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் புத்த மதத்தை சேர்ந்த பிக்கு என்பது தெரியவந்தது. கண்கலங்கியது பற்றி திருமாவளவன் அவரிடம் கேட்டார். அப்போது அவர் கண்கலங்கியபடி, ‛‛எனது மகன் என்னை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார். 10 ஆண்டுகளாக வீட்டுக்கு செல்லவில்லை. சமுதாய பணி தானே செய்தீர்கள் எனக்கூறி வீட்டுக்கு சென்ற என்னை ஒதுக்கினார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன்'' என கண்கலங்கினார்.
இதனை கேட்ட திருமாவளவன் ‛‛தைரியமா இருங்க.. அழாதீங்க'' எனக்கூறி அவரது கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருமாவளவன் பொதுவாக மடாதிபதிகள், சாமியாரிடம் நெருக்கம் காட்டுவது இல்லை. இருப்பினும் அவருக்கு புத்த மதம் மீது ஈடுபாடு உண்டு. இந்நிலையில் தான் கண்கலங்கிய புத்தமத பிக்குவுக்கு அவர் ஆறுதல் கூறி கண்ணீரை துடைத்து விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications