நூல் நூலாக "தொங்கிய" வேலூர் மட்டன்.. பிரபல ஓட்டலில் ஆட்டுக்கறியை கண்டு ஆடிப்போன அதிகாரிகள்.. கொடுமை
வேலூர்: மட்டன் கடைகள், சிக்கன் கடைகள், மீன் மார்க்கெட், அசைவ ஓட்டல்கள் என ஒன்றையும் விடாமல், உணவுத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வுகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். இதில், பிரபல ஓட்டல்கள் சில புகாரில் சிக்கியிருக்கின்றன.
சமீபகாலமாகவே, ஓட்டல்களிலும், இறைச்சி கடைகளிலும் தரமற்ற இறைச்சியை விநியோகிக்கப்பதாக புகார்கள் வெடித்து வருகின்றன.. இதையடுத்து அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஓட்டல்கள்: ஓட்டல்களில், நடைபாதை உணவகங்களில், இறைச்சி கூடங்களில், மீன் மார்க்கெட்டுகளில் என எங்கெங்கு புகார்கள் வருகிறதோ, அங்கெல்லாம் விரைந்து சென்று, சோதனை மேற்கொள்கிறார்கள். இதில், புகார்கள் உண்மையாகும்பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன..
கடந்த வாரம்கூட டெல்லியில் இருந்து ரயிலில் கொண்டு வரப்பட்ட சுமார் 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறியை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். ஆனால், நேற்று முன்தினமும் கோடம்பாக்கத்தில் கெட்டுப்போன இறைச்சி விற்பதாக புகார் கிளம்பியது.
ஆடுகள்: கே.கே., சாலையில் உள்ள எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில், ஆடுகள் வெட்டப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து, திடீரென எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டிற்குள் நுழைந்தனர்.
அப்போது, மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில், ப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த 28 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். அத்துடன் அனுமதியில்லாத இடத்தில் வெட்டியதற்காகவும், சுகாதாரமாக வைக்காததற்காகவும், நல்ல முறையில் இருந்த 40 கிலோ ஆட்டு இறைச்சியையும் சேர்த்தே அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.
வேலூர் மாவட்டம்: இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் அதிரடியை காட்டி வரும்நிலையில், இப்போது வேலூா் மாவட்டத்திலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
காரணம், வேலூா் மாவட்டத்திலுள்ள ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் வி.ஆா்.சுப்புலட்சுமிக்கு புகாா்கள் சென்ற நிலையில், அவரது உத்தரவின் பேரில், வேலூா், தொராப்பாடி, அரியூா், பாகாயம் ஆகிய பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
அதிக மசாலா: அப்போது, உணவுகளில் அதிக நிறம் பயன்படுத்தி விற்பனை செய்யப்படுகிறதா? தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுகிறதா? மசாலா வகைகள் என்னென்ன? கோழி, ஆட்டு இறைச்சிகள் சுத்தமான முறையில் வாங்கி சமைக்கப்படுகிறதா? என்றெல்லாம் விசாரணை நடத்தினார்கள்.. மேலும், ஓட்டல்களிலிருந்த பிரிட்ஜ்ஜையும் திறந்து பார்த்தபோது, பல நாள்களுக்கு முன்பு வாங்கிய கோழி, மட்டன்கள் சமைப்பதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த இறைச்சி படுமோசமாக கெட்டுப்போய் துர்நாற்றம் எடுத்துள்ளது.. இதையடுத்து, கெட்டுப் போன 20 கிலோ கோழி, மட்டனை பறிமுதல் செய்தனா்.. சம்பந்தப்பட்ட 2 ஓட்டல்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதேபோல், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகத்துக்கு ரூ.2 ,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தரமற்ற உணவு: இதையடுத்து உணவுத்துறை அதிகாரிகள் சொல்லும்போது, "தரமற்ற முறையில் உணவுகள் சமைத்தால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. சம்பந்தப்பட்ட கடைகளுக்கும் சீல் வைக்கப்படும். உணவுகளில் செயற்கையான நிறமிகளை சோ்க்கக்கூடாது.
மக்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் உணவகங்களில் சாப்பிடும் போது ஏதேனும் கெட்டுப்போன உணவுகள் இருந்தால் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
பதிவு சான்றிதழ்: அதுமட்டுமல்ல, உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்களை முறைப்பட வேண்டும். இறைச்சிக் கடைகளில் சுகாதாரமற்ற நிலையில் கடைகளின் முன்பு இறைச்சியைத் தொங்கவிடக்கூடாது. துருப்பிடிக்காத கம்பியில் சுகாதாரமாக இறைச்சியை தொங்கவிடலாம்... இறைச்சிக்கடை பணியாளர்கள் கையுறை, தலையுறை, ஏப்ரான் உறை அணிந்து சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும். கண்ணாடி கூண்டில் அல்லது கண்ணாடி போன்ற தாள் கொண்டு இறைச்சியை மூடி வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications