வேலூர் பையன்.. கடலூர் பெண்.. காதலித்து திருமணம் செய்த புதுமண தம்பதி.. ஜோலார்பேட்டையில் இருந்த கோலம்
வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே அரும்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் குடும்ப பிரச்சனையில் மனைவியை பிரிந்த நபர், இரண்டாவதாக கடலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் பெற்றோர் இந்த திருமணத்தை கடுமையான எதிர்த்த நிலையில், புதுமணத்தம்பதி எடுத்த முடிவு பெற்றோரை ஆடிப்போக வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் 2 கே கிட்ஸ்கள் பலர் காதல் என்ற பெயரில் வாழ்க்கையை தொலைக்கிறார்கள். எதார்த்தம் புரியாமல் கண்ணை மூடிக்கொண்டு காதலிக்கிறார்கள்.. காதலிக்க தகுதிகள் எதையும் பார்ப்பது இல்லை.. ஆனால் திருமணம் என்று வரும் போது சிக்கலை சந்திக்கிறார்கள்.ஒரு பக்கம் பெற்றோர் எதிர்ப்பு, மறுபக்கம் பொருளாதார சிக்கல், இன்னொரு பக்கம் ஆதரவு இல்லாதது போன்ற சூழல்களை எதிர்க்கொள்கிறார்கள்..

அப்போது கணவன் குடிகாரனாகவோ அல்லது பொறுமை இல்லாத முட்டாளாகவே வாய்த்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை அவ்வளவு தான். அதேபோல் மனைவி முன்கோபம் உள்ளவராகவோ, சந்தேகப்படுபவராகவோ இருந்தால் அந்த இளைஞனின் வாழ்க்கை அவ்வளவு தான்.. அதேபோல் பெற்றோர் எதிர்ப்பை சமாளிக்கமுடியாமல் சிலர் தவறான முடிவெடுக்கிறார்கள். திருப்பத்தூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேகர் என்பவருடைய மகன் மணிகண்டனுக்கு 30 வயது ஆகிறது. இவர் அந்த பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி லிஜிதா என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக மணிகண்டனும் அவரது மனைவி லிஜிதாவும் பிரிந்துவிட்டனர். இதனால் லிஜிதா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் மணிகண்டனுக்கு கடலூர் மாவட்டம் காரமடைகுப்பம் சரஸ்வதி நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் கோகிலா (19)உடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. கோகிலா பண்ருட்டியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் கடந்த ஜனவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்திருக்கிறார்கள்.
இதுதெரியாமல் மகள் காணாமல் போய்விட்டதாக கோகிலாவின் தாயார் பரமேஸ்வரி நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகிலாவை தேடி வந்தனர். இதையறிந்த புதுமண தம்பதி இருவரும் நேற்று முன்தினம் காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அதற்காக இங்கு வந்ததாகவும் கூறியிருக்கிறார்கள்.
பின்னர் திடீரென இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இருவரும் வெவ்வேறு சமூகம் மற்றும் மணிகண்டன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்களோ என பயந்துள்ளார்களாம். இந்தநிலையில் நள்ளிரவு இருவரும் பைக்கில் காட்பாடி- லத்தேரி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றனர். அங்கு தண்டவாளம் அருகே பைக்கை நிறுத்தினர். பின்னர் தண்டவாளத்தில் ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்து பிடித்துக்கொண்டு அந்த வழியாக சென்ற ரயில் முன் பாய்ந்து உயிரைவிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)


Click it and Unblock the Notifications
