வேலூர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் சூப்பர்.. நடுராத்திரியில் போலீஸ் தந்த இன்ப அதிர்ச்சி
வேலூர்: சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேலூர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் போலீஸ் எஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையிலான போலீசார் இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தினர்.
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை தமிழ்நாட்டில் அதிக வாகனங்கள் செல்லும் இரண்டாவது முக்கியமான சாலையாகும். சென்னையில் இருந்து எடுத்துக் கொண்டால் திருச்சி சாலைக்கு அடுத்தபடியாக வேலூர் சாலை தான் அதிக வாகனங்கள் செல்லும் சாலையாகும்.

இந்த வேலூர் சாலை வழியாகவே பெங்களூர் நகரத்திற்கும், மும்பை, கோவை, மைசூர்,சூரத், அஹமதாபாத் உள்பட நாட்டின் மேற்கு பகுதிக்கு போக முடியும். இதுதவிர தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் என பல்வேறு நகரங்களுக்கு போக முடியும்.
சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை எடுத்துக் கொண்டால், சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 3 முதல் 3.30 மணி நேரம் வரை வர வேண்டும். பெங்களூர் நகரத்திற்கும் கிட்டத்தட்ட 3 முதல் 3.30 மணி நேரம் வரை போக வேண்டும். சென்னைக்கும் பெங்களூருக்கும் மையப்பகுதி இது இல்லை என்றாலும் நேரத்தை கணக்கிட்டால் கிட்டத்தட்ட இந்த இடம் தான் மையப்பகுதியாகும்.

பெங்களூருவில் இருந்து சென்னைக்கோ, சென்னையில் இருந்து பெங்களூருக்கோ செல்வோர் அதிகாலை நேரங்களில் வரும் போது, சிறிது கவனக்குறைவாக சென்றாலும் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ள பகுதி தான் வேலூர். வாணியாம்பாடி முதல் வேலூரை கடந்து ராணிப்பேட்டை வரை மிகவும் கவனமாக வர வேண்டும். ஏனெனில் இந்த பகுதியில் ஏராளமான நிறுவனங்கள் மற்றும் தொழிற்பகுதிகள் உள்ளன.
இந்த சாலையில் தூக்க கலக்கத்தில் வாகனத்தை ஓட்டினால் அவ்வளவு தான். குறிப்பாக அதிகாலை நேரங்களில் வேலூர் பள்ளிக்கொண்டாவை தாண்டி வருவோர் மிக கவனமாக இருக்க வேண்டும். சாலையோர பள்ளங்கள், முன்னே செல்லும் வாகனங்கள் திடீரென பிரேக் பிடித்து நிற்பது உள்ளிட்ட காரணங்களால் விபத்து அபாயம் அதிகமாக உள்ளது.
இதன் காரணமாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை தூக்க கலக்கத்தில் வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்திலும், முன்னால் செல்லும் வாகனங்கள் மீது மோதியும் விபத்துகளில் சிக்குவது அதிகமாகி வருகிறது.

இதனை தவிர்க்கும் வகையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு பள்ளிகொண்டா சுங்கச்சாவடி பகுதியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாசுரன், விரிஞ்சிபுரம் சப்இன்ஸ் பெக்டர் சிவா உள்பட பள்ளிகொண்டா மற்றும் விரிஞ்சிபுரம் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு செய்தார்கள்.
பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி சென்ற வாகன ஓட்டிகளுக்கு தேநீர், பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள் கொடுத்து, சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அப்போது இரவு நேர பயணத்தின் போது டிரைவர்கள் அசாதாரண சூழ்நிலையை உணர்ந்தால் சாலையோரம் உள்ள பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சிறிதுநேர ஓய்வுக்கு பின் பயணத்தை தொடர வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் வெளி மாநில கனரக லாரிகளில் கட்டாயம் மாற்று டிரைவர் ஒருவர் இருக்கவேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.












Click it and Unblock the Notifications