அரசு வேலைக்காக கோடி கோடியாய் பணம்.. விஜயா பேங்க்கில் ரூ.1.10 கோடி.. வேலூரில் விஜயபானு ஐபிஎஸ் கெத்து
வேலூர்: வேலூரை சேர்ந்த விஜயபானு, சேலத்தில் ரூ.500 கோடி மோசடி தொடர்பாக 4 பேரில் ஒருவராக கைதாகியிருக்கிறார்.. கைதானவர்களிடம் விசாரணை நடக்கிறது. இந்நிலையில், விஜயபானு குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் ரவுண்டு கட்டி வருகிறது.
வேலூரை சேர்ந்த விஜயபானு, ஜெயபிரதா உள்ளிட்ட சிலர், சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில் நடத்தி வந்த நிலையில், தங்களுடைய அறக்கட்டளையில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவோம், இரட்டிப்பு தொகை தருவோம் என்று ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்கள்.

முதலீடு: இதை நம்பி , பலரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.. இப்போது அறக்கட்டளையை ரூ.500 கோடி வரை மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து, சேலம் மாவட்டத்தையே அதிர வைத்தது.. பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் இது தொடர்பான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதில் விஜயாபானு என்ற பெண்ணை பற்றிதான் பல்வேறு தகவல்கள் தினம் தினம் வெளியாகி கொண்டேயிருக்கிறது.. வெறும் 10 ரூபாயில் மலிவு விலைக்கு சாப்பாடு போட்டு ஏழை மக்களை கவர ஆரம்பித்த விஜயா, ரூ.500 கோடி மோசடி விவகாரத்தில் ஈடுபட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
மோசடி வழக்கு: வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்தவராம் விஜயபானு.. கடந்த 2011, 2012 காலகட்டத்திலேயே மோசடி வழக்கு ஒன்றில் கைதாகி புழல் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தாராம்.
அப்போது, சிறையில் பணியாற்றிய விஜயா என்ற பெண் போலீஸிடம், "டெல்லியில் தான் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றுவதாகவும், ஜெயிலில் நடக்கும் ஊழலை ரகசியமாக அறிந்துகொள்ள, சிறையில் இருப்பதாகவும் சொல்லி அறிமுகமாகியுள்ளார். இதையும் விஜயா நம்பி பழகியிருக்கிறார்.. பிறகு 2011ல், சிஎம்சி யில் மேம்பாலம் கட்ட காண்ட்ராக்ட் எடுத்துள்ளதால், அதற்கு நகை பற்றாக்குறையாக உள்ளது என்று சொல்லி, விஜயாவிடம், 22 சவரன் நகைகளை ஏமாற்றினாராம் விஜயபானு.
பாஜக நிர்வாகி: அதேபோல, வேலூர் மாவட்ட பட்டியல் அணி தலைவராக உள்ளதாக பலரிடம் சொல்லி வந்துள்ளார் விஜயபானு.. கடந்த 2021 நகராட்சி தேர்தலில் 5-வது வார்டில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனாலும், "பாஜக மேலிடம் பேசி, அரசு வேலை வாங்கி தருகிறேன், டெண்டர் எடுத்து தருகிறேன்" என்றெல்லாம் மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த விஷயம் பாஜக தலைமைக்கு தெரிந்து, கடந்த வருடம், விஜயபானுவை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கிவிட்டதாம்.
உடனே திமுக ஆதரவாளர் என்று பலரையும் ஏமாற்ற துவங்கியிருக்கிறார்.. சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனை வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, அம்மாவட்ட மக்களை கவர்ந்துள்ளார்.
மோசடிகள்: இதுபோன்ற மோசடிகளை, வேலூர், சென்னை, காஞ்சிபுரம், ஆந்திரா என விஜயபானுவின் மோசடிகள் நீள்வதாக சொல்கிறார்கள் போலீசார்.. எனவேதான், இவர் எங்கெல்லாம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், அறக்கட்டளை விஜயாபானு, ஜெயபிரதாவுக்கு எந்தெந்த வங்கிகளில் கணக்குகள் இருக்கிறது என போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.. சேலத்தில் உள்ள 2 தனியார் வங்கிகளில் இருவரது பெயரிலும் 7 சேமிப்பு கணக்குகள் இருந்ததை கண்டறிந்தனர். அவற்றில் விஜயாபானு பெயரில் ரூ.1.10 கோடியும், ஜெயபிரதா பெயரில் ரூ.90 லட்சமும் பணம் இருந்திருக்கிறது...
முடக்கம்: இதையடுத்து, அந்த 2 தனியார் வங்கிகளுக்கும் கடிதம் வழங்கி, அந்த 7 கணக்குகளில் இருந்த ரூ.2 கோடி பணத்தையும் இன்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியிருக்கிறார்கள். தொடர்ந்து விஜயபானுவிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications