வேலூரில் சப் இன்ஸ்பெக்டர்களின் பிள்ளைகள்.. புதுமணத் தம்பதிகளாக மாறிய சில மாதத்தில்.. முடிந்த கனவுகள்
வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பேபி ஷாமினி என்ற பெண்ணுக்கும், அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பிரியா குமாரியின் மகன் ரோகித்துக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அடுத்தடுத்து இவர்களுக்கு நடந்த சம்பவம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது.
வரதட்சணை பிரச்சனையும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத பிரச்சனையும் புதுமணத்தம்பதிகளின் வாழ்வில் புயலை வீசுவது நடக்கிறது. புதுமணத்தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது ஒருபுறம் எனில், குடும்பத்தினருக்காக இருவருமே ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் அவர்கள் பக்கம் நிற்க வேண்டும். அதேபோல் சண்டை என்று வரும் போது, அதன் காரணத்தை புரிந்து உடனே சமாதானம் ஆவதும் பல சிக்கலை தடுக்கும்.

அதேபோல் ஈகோ பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி விட்டுக்கொடுத்து வாழ்வது தான் புதுமணத்தம்பதியினரின் வாழ்க்கையின் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். மாறாக குடும்ப உறவுகளின் பேச்சைக் கேட்டு துணையை வெறுத்தால், அல்லது துணைக்கு நடக்கும் அவமானத்தை கண்டு கொள்ளாமல் இருந்தால் அவர்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. சிலர் தவறான முடிவெடுக்கவும் வாய்ப்பு உள்ளது. வேலூர் பள்ளிக்கொண்டாவில் நடந்த சம்பவத்தை பற்றி பார்ப்போம்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்த 55 ராமகிருஷ்ண மூர்த்தி என்பவருடைய மனைவி ஜெயந்தி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் பேபி ஷாமினிக்கு 23 வயது ஆகிறது. இவருக்கும், அணைக்கட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பிரியா குமாரியின் மகன் ரோகித் (26) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களின் ஏற்பாட்டின் பேரில் இனிதே திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ரோகித்துக்கு குடிப்பழக்கம் இருப்பது திருமணமான 15-வது நாளில் பேபி ஷாமினிக்கு தெரியவந்ததாம். பேபி ஷாமினி தாயார் ஜெயந்தியிடம், தனது கணவர் குடித்துவிட்டு வந்து அடிப்பதாக குற்றம்சாட்டினாராம். இதனால் இவர்களது வாழ்வில் திடீரென புயல் வீசியது. கடந்த மே 6-ந் தேதி பேபி ஷாமினி தாய் வீட்டிற்கு வந்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். கடைசியாக தனது கணவருடன் அவர் வீடியோ காலிலும் பேசியதாக கூறப்படுகிறது. வரதட்சணை கொடுமையால் பேபி ஷாமினி இப்படி செய்ததாக அவரது தாயார் ஜெயந்தி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் பேபி ஷாமினி உயிரைவிட்டதில் இருந்து அவரது கணவர் ரோகித் மிகுந்த மன வேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 8-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரோகித் மருந்தை குடித்துள்ளார். அதை பார்த்த அவரது பெற்றோர் ரோகித்தை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று ஒரு சில நாட்களில் வீட்டுக்கு வந்த அவர் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். நேற்று அதிகாலை 6 மணி அளவில் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். காலையில் இதை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ரோகித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் ரோகித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது குடும்பத்தினர் பள்ளிகொண்டா போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி உயிரைவிட்ட நிலையில், கணவரும் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications