ராணிப்பேட்டையில் க்ளு கிடைக்கல.. தனிமையில் ஆந்திரா மல்லேஸ்வரி.. 35 நாளில் சிக்கியது எப்படி தெரியுமா?
ராணிப்பேட்டை: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த அக்டோபர் 12-ம் தேதி முதல் காணாமல் போயுள்ளார். இதற்காக 8 தனிப்படைகள் அமைத்து தேடியும் எந்த முன்னேற்றமும் இல்லாததால், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
குடும்பத்தினர், உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியும் சிறுமி பற்றிய துப்பு கிடைக்கவில்லை. இன்னமும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..
இந்நிலையில், ராணிப்பேட்டையில் ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போன வழக்கில், 35 நாட்களுக்கு பிறகு குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். குழந்தையை கண்டுபிடிக்க முடியாமல் 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையை சேர்ந்த சேகர் (46), பிரேமா (23) தம்பதிக்கு மகேஸ்வரி என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. நாடோடி சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், பழைய பொருள்கள் மற்றும் பாட்டில்களைச் சேகரித்து விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
கடந்த செப்டம்பர் 23-ம் தேதி இரவு, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வானாபாடி மாணிக்கம் நகர் பகுதியில் பழைய பொருள்களை சேகரித்துவிட்டு, குழந்தையுடன் சாலையோரத்தில் தூங்கியுள்ளனர். நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கண்விழித்துப் பார்த்தபோது குழந்தை மாயமாகியிருந்தது.
குழந்தை மகேஸ்வரி
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிப்காட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள்.. குழந்தையின் போட்டோவுடன் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
ஆனால், ஆரம்பகட்ட விசாரணையில் போதிய துப்பு கிடைக்கவில்லை.. சிசிடிவி காட்சிகளோ, முறையான தடயங்களோ கிடைக்காமல், போலீசார் திணறினார்கள்.. பிறகு இதற்காகவே, ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் மல்லேஸ்வரி என்ற பெண்ணின் வீட்டில் குழந்தை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், 35 நாட்களுக்குப் பிறகு மகேஸ்வரியைப் பத்திரமாக மீட்டனர்.
யார் இந்த மல்லேஸ்வரி
இந்தச் சம்பவத்தில் குழந்தையைக் கடத்தி சென்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் மல்லேஸ்வரி பற்றின விஷயங்கள் வெளியே வந்தன,
அதாவது, லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபதி - கௌசல்யா தம்பதியினர். இவர்களின் தோழிதான் மல்லேஸ்வரி,, ஆந்திராவை சேர்ந்த இவருக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆகிறது.. ஆனால் குழந்தைகள் இல்லை.. இவருக்கு குழந்தை இல்லாத காரணத்தினாலேயே, அவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே விட்டு சென்றுவிட்டாராம்.
மொத்தம் 5 பேர் கைது
இந்த விஷயம் அறிந்த பூபாலன், கௌசல்யா தம்பதியினர், தனிமையில் வசிக்கும் மல்லேஸ்வரிக்கு உதவும் நோக்கத்தில் இந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று கொடுத்தது, தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஆந்திராவிலேயே, ஒரு லாட்ஜில் மறைத்து வைத்திருந்த, குழந்தையை போலீசார் மீட்டனர்..
குழந்தை காணாமல் போனது முதல் 35 நாட்களாகத் தொடர்ந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, குழந்தை மீட்கப்பட்டிருப்பது இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது.
இப்போது இதில் தொடர்புடைய சந்தோஷ் (வயது 32), குமார் (வயது 30), பூபதி (வயது 42), கௌசல்யா (வயது 40), மல்லேஸ்வரி (வயது 44) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்த்து கொண்டிருக்கிறார்கள்..


Click it and Unblock the Notifications
