கடனே வழங்காமல் ரூ.97 லட்சம் மோசடி.. கம்பி எண்ணும் ‘பலே’ பெண் மேனேஜர்- இன்னும் சிலரும் சிக்குவார்களா?
வேலூர் : மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி செய்த கூட்டுறவு வங்கியின் பெண் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உமா மகேஸ்வரி தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த வழக்கில் இவரோடு இன்னும் சிலரும் சிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உமா மகேஸ்வரி மீதான மோசடி புகார்கள் உறுதியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்கள்
வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் அமைந்துள்ளது. இங்கு 2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி (38). இவர் பணியாற்றிய காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.97 லட்சத்து 37 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மோசடி
இந்த மோசடி குறித்து துறையின் உயர் அலுவலர்களுக்கு புகார்கள் பறந்தன. இதையடுத்து குடியாத்தம் வங்கியில் வேலூர் வணிக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், உமா மகேஸ்வரி பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி, வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

பெண் மேலாளர் கைது
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் உமா மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட உமா மகேஸ்வரி விசாரணைக்குப் பின்னர் வேலூர் ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சிலரும்?
உமா மகேஸ்வரி தற்போது வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட பெண் மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மேலும் சிலரும் இதுதொடர்பாக கைதாவார்கள் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications