உளுந்தூர்பேட்டை அருகே மெதுவாக சென்ற கார்.. டிராவல்ஸ் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 2 பேர் மரணம்
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது மோதாமல் இருக்க மெதுவாக சென்ற கார் மீது டிராவல்ஸ் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் காரில் சென்ற 2 பேர் உள்பட 45 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சிறிது கவனக்குறைவாக வந்தாலும் பெரிய அளவில் விபத்து ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்கள், திடீரென ஏதாவது ஒரு வாகனம் பிரேக் போடும் போது, பின்னால் வந்து மோதிவிடுகின்றன.

அதேபோல் சில வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி இருப்பார்கள், பின்னால் வந்த வாகனங்களை கவனிக்காமல் சட்டென எடுத்து சாலையின் மையப்பகுதியை நோக்கி புறப்பட பார்ப்பார்கள். இதுவும் பெரிய விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது.
அதேபோல் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதும் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.. கிராமங்களை நோக்கி செல்லும் சாலைகளில் வாகனங்கள் திரும்ப முயலும், அப்போது வாகனங்கள் வேகத்தை குறைக்கும். இதை கவனிக்காமல் விபத்தில் சிக்குவதும் நடக்கிறது.
இதுதவிர சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை உள்ள சாலையில் இன்னமும் சில இடங்களில் இருவழியாகவே உள்ளது. இதுவும் விபத்திற்கு காரணமாக உள்ளது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரை வாகனங்கள் மிக அதிகமாக செல்லும் சாலை என்பதால், சாலையில் இரவு நேரங்களில் செல்வோர் மிக கவனமாக செல்ல வேண்டியதுடன், பொறுப்புடன் செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் சிப்காட் எதிரே முன்னால் சென்ற லாரி மீது மோதாமல் இருக்க மெதுவாக சென்ற கார் மீது பின்னால வந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதில் காரில் சென்ற மேலும் 2 பேர் உள்பட பேருந்தில் வந்த 45க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரையும் மீட்ட போலீசார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications