விழுப்புரத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
விழுப்புரம் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
விழுப்புரம்: விழுப்புரத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் வழங்கியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா அகலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதியின் மகன் ராமு என்கிற ராமமூர்த்தி (32). இவர் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தின் கூலித் தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. அப்போது பலர் வேலையின்றி தவித்து வந்தனர். அந்த வகையில் ராமுவும் வேலையின்றி இருந்து வந்துள்ளார்.

சென்னை பள்ளி விடுதி
அப்போது சென்னையில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி 6ஆம் வகுப்பு படித்து வந்த 12 வயது மாணவி கொரோனா ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதை அடுத்து அவர் அகலூரில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அந்த மாணவியை ராமு வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

செல்போனில் ஆபாச படம்
அப்போது அந்த மாணவிக்கு தனது செல்போனில் ஆபாச படங்களை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசு தரப்பு
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பு, அரசு தரப்பு என இரு புறத்திலும் சாட்சிகள் விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட ராமுவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 12 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட 12 வயது மாணவிக்கு இழப்பீடாக அரசு சார்பில் ரூ 7 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டது.

கடலூர் மத்திய சிறை
இதையடுத்து ராமு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜராகி வாதாடினார். முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக போக்சோ சட்டத்தில் ராமு கைது செய்யப்பட்டிருந்தார். இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் 4 வயது சிறுமிக்கு 2021 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக 31 வயது பெருமாள் என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையை விருதுநகர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் அளித்தது.












Click it and Unblock the Notifications