அன்புமணியுடன் கூட்டணி அமைத்த அதிமுக.. எடப்பாடி அப்படி சொல்லலாமா.. கொந்தளிக்கும் ராமதாஸ்!
சென்னை: அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணியை பாமக தலைவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது சட்டத்திற்கு எதிரானது என்று கூறிய ராமதாஸ், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. இருவரும் பாமக தங்களுக்கு சொந்தம் என்று கூறி வரும் நிலையில், தேர்தலுக்கும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைவதாக அறிவித்தார்.

தொடர்ந்து அன்புமணி பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சியான தருணம். வலுவான கூட்டணியாக அமைந்துள்ளது. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட போது, மக்கள் திமுக மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதேநேரம் ராமதாஸ் பற்றிய கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியோ, அன்புமணியோ பதில் அளிக்காமல் புறப்பட்டனர். இதையடுத்து பாமகவுக்கு 17 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா சீட் அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது. எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல்பாடுகள் ராமதாஸ் தரப்பை கொந்தளிக்க செய்திருக்கிறது.
அதிமுக - அன்புமணி தரப்பு பாமக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது தொடர்பாக ராமதாஸ் பேசுகையில், அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது ஏற்புடையது அல்ல. அன்புமணியை பாமக தலைவர் என்று எடப்பாடி பழனிசாமி கூறியது சட்டத்திற்கு எதிரானது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை செய்தியாளர்களை சந்தித்து தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
அதிமுக - பாமக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக எந்தப் பக்கம் செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் தவெக தலைவர் விஜய்யும் ராமதாஸ் தரப்பை செங்கோட்டையன் மூலமாக அணுகி வருவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications