திமுக மேடையில் பேசுவது ஒன்று.. செயல்பாட்டில் வேறொன்று.. மீண்டும் நிரூபணம்.. வானதி சீனிவாசன் தாக்கு!
விழுப்புரம்: சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார், ஆனால் நடப்பதோ வேறு என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியின் நகர் மன்ற துணைத்தலைவராக ராஜலட்சுமி வெற்றிவேல் என்ற பட்டியலின பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவர் விசிகவை சேர்ந்தவர். இங்கு நகர்மன்ற தலைவராக திமுகவின் நிர்மலா ரவிச்சந்திரன் உள்ளார். இந்நிலையில், துணைத் தலைவராக உள்ள தனக்கு இதுவரை துனைத் தலைவருக்கான தனி இருக்கை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் ராஜலட்சுமி.

நகர்மன்ற தலைவர் இருக்கைக்கு அருகே தனக்கு இருக்கை வழங்கவில்லை என்றும், நகராட்சி வளர்ச்சி பணிகளில் துணைத் தலைவரை அழைத்து சென்று ஆய்வு செய்வதில்லை எனவும் தான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனக்குரிய மரியாதையை வழங்கவில்லை எனவும் விழுப்புரம் ஆட்சியரிடம் ராஜலட்சுமி புகார் மனு அளித்துள்ளார். நகர் மன்ற துணைத் தலைவரே சாதிய ஒடுக்குமுறை தொடர்பாக புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் மட்டுமல்ல, சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாகவும் கூறினார். ஆனால் நடப்பதோ வேறு..
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியின் நகர மன்ற துணைத்தலைவராக பட்டியலின பெண்ணான ராஜலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். பட்டியலின சமூகம் என்பதால் சாதிய ரீதியில் மரியாதை வழங்காமல் திண்டிவனம் நகராட்சி தலைவர் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கு கூட அழைத்து சென்று ஆய்வு செய்வதில்லை. தனக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கூட வழங்கவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். திமுக மேடையில் பேசுவது ஒன்று... செயல்பாட்டில் வேறொன்று என்பதை இந்த சம்பவம் மூலம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது” என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications