அரசு பஸ்சில் பயணி திடீர் மரணம்.. கண்டக்டரின் இரக்கம் இல்லாத செயல்.. அதிரடி காட்டிய போக்குவரத்து துறை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசு பஸ்சில் வந்துகொண்டிருந்த பயணி ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், உயிரிழந்தவரின் உடலையும் அவரோடு வந்த 2 பேரையும் பஸ்சின் கண்டக்டர் மற்றும் ஓட்டுநர் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றனர். இந்த நிலையில் அந்த அரசு பஸ் டிரைவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பஸ் கண்டக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தீவன கம்பெனியில் சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த பீமா மண்டாவி (வயது 60), அசோக் குமார் (19) கஜுனுகொடோபி (20) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் அசோக்குமாரும், கஜுனுகொடாபியும் பீமா மடாவியின் பேரன்கள் என கூறப்படுகிறது.

முதியவர் பீமா மடாவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் பார்த்துள்ளனர். ஆனால் அவருக்கு உடல்நிலை இயல்பு நிலைக்கு வரவில்லை. இதனால் சென்னைக்கு சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று நினைத்தனர். அதன்படி கடந்த 6ஆம் தேதி மூன்று பேரும் அரசு பேருந்தில் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர்.
இந்த பஸ்சை தற்காலிக ஓட்டுனர் ராம்குமார் இயக்கி வந்தார். பஸ்சில் ரசூல் ரகுமான் என்ற கண்டக்டர் பணியில் இருந்தார். பஸ் செங்கல்பட்டு அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது பஸ்சில் சென்றுகொண்டிருந்த போதே, திடீரென முதியவர் பீமா மாடவி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் பஸ்சில் இருந்த சக பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து பேரன்கள் இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் இது பற்றி பஸ் கண்டக்டரிடம் தெரிவித்துள்ளது. ஆனால் இதைக்கேட்டதும் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பஸ்சை நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினார். தொடர்ந்து உயிரிழந்தவரின் உடலை கீழே இறக்குங்கள் என்று கூறி அசோக் குமாரையும், கஜுனுகொடாபியையும் இறங்குமாறு கூறினார். இரவு நேரம் ஆகிவிட்டதால் எங்களால் எங்கு செல்ல முடியும் என்று கேட்டுள்ளனர்.
ஆனால் கல் நெஞ்சம் கொண்ட அந்த டிரைவரும், கண்டக்டரும் அவர்களை நடுவழியில் இறக்கிவிட்டு விட்டு அங்கிருந்து பஸ்சை எடுத்து சென்றனர். இதையடுத்து நடு இரவில் என்ன செய்வதென்று தவித்த அவர்கள் ஆம்புலன்ஸ் உதவியோடு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். இந்த சம்பவம் பற்றி அறிந்த செங்கல்பட்டு போலீசார், அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி விசாரணை நடத்திய விழுப்புரம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் சடலத்தை நடுவழியில் இறக்கிவிட்ட அரசு பஸ் தற்காலிக டிரைவர் ராம்குமாரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் கண்டக்டர் ரசூல் ரகுமானை பணி இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications