விழுப்புரம் அருகே ஒரு அறையில் மருமகள்.. மறு அறையில் அத்தை.. 2 கே கிட்ஸ் அறிய வேண்டிய பாடம்
விழுப்புரம்: இந்த காலத்து குழந்தைகள், குறிப்பாக 2 கே மற்றும் 2 ஜென் கிட்சுகளை கையாள்வது மிகப்பெரிய சிக்கலாகி உள்ளது. சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தவறான முடிவெடுக்கிறார்கள். ஆசிரியர் தலைமுடி வெட்டி ஒழுங்காக வா என்றால் அவமானம் என்று நினைக்கிறார்கள்..ஒழுங்காக படி என்றால் அதனை அவமானமாக நினைக்கிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே செல்போனில் நேரத்தை வீணடிக்காதே என 10-ம் வகுப்பு மாணவியை அத்தை கண்டித்துள்ளார். அதனால் மாணவியும் சரி, இறுதியில் அத்தையும் இன்று உலகத்திலேயே இல்லை..
தான் பார்க்காத எல்லா சந்தோஷத்தையும் தன் பிள்ளைகள் பார்க்க வேண்டும். தான் படிக்காத பெரிய பள்ளியில் தன் மகன் படிக்க வேண்டும்.. தனக்கு கிடைக்காத உடை, உணவுகள் தன் மகனுக்கு மகளுக்கு கிடைக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து 80ஸ்களில் பிறந்த பெற்றோர் செய்கிறார்கள். அது 2 கே மற்றும் 2 ஜென் கிட்ஸ்சுகளை அதிக செல்லம் உள்ள குழந்தைகளாகவும், பொறாமை, வன்மம், கோபம், தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்களை கொண்டவர்களாகவும் வளர்க்கிறது.

படிக்க சொல்ல பயம்
சில குழந்தைகள் சின்ன சின்ன விஷயங்களை கூட தாங்கி கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இதனால் ஆசிரியர்கள் கண்டிக்கவே அஞ்சுகிறார்கள். படித்தால் படி, படிக்காட்டி போ என்று விட்டுவிடுகிறார்கள். கண்டிப்புடன் வளராத குழந்தை கடைசியில் சிக்கலை சந்திக்கும் போது, முடிவெடுக்க முடியாமல் தவிக்கின்றன. வாழ்க்கையை எளிதாக முடித்துக் கொள்கின்றன. விழுப்புரம் அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
விழுப்புரம் அத்தை
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்த 25 வயதாகும் விஜய் மற்றும் இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. விஜய்யின் அக்கா அமலா, செங்கல்பட்டு மாவட்டம் பரமன்கேணி மீனவர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கீர்த்திகா (15) என்ற மகள் உள்ளார்.
மாமா வீட்டில் படிப்பு
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏழுமலை இறந்து விட்டார். இதையடுத்து அமலா தனது மகளுடன் பனிச்சமேடு கிராமத்தில் தம்பி விஜய் வீட்டின் அருகில் குடியேறியிருக்கிறார். அருகில் உள்ள தாய்மாமா விஜய் வீட்டில் வளர்ந்து வந்த கீர்த்திகா, அனுமந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார்.
இருவரும் வரவில்லை
நேற்று முன்தினம் இரவு விஜய், ஸ்ரீமதி, கீர்த்திகா ஆகியோர் வீட்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பின்னர் கீர்த்திகா வீட்டின் மாடிக்கு தூங்கச் சென்றார். விஜய், ஸ்ரீமதி ஆகியோர் கீழ்வீட்டில் தூங்கியிருக்கிறார்கள். நேற்று அதிகாலை மீன்பிடிப்பதற்காக விஜய் கடலுக்கு சென்றுவிட்டார். நீண்ட நேரமாகியும் வீட்டில் இருந்து கீர்த்திகா, ஸ்ரீமதி ஆகியோர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அமலா மற்றும் அக்கம் பக்கத்தினர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
ஒரு அறையில் அத்தை
அப்போது வீட்டில் ஸ்ரீமதியும், மாடியில் கீர்த்திகாவும் தூக்கில் பிணமாக தொங்கினர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மரக்காணம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவை கனகசெட்டிகுளத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போனுக்காக கண்டிப்பு
போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு சாப்பிடும்போது, 'செல்போனில் அதிக நேரத்தை வீணாக்காதே' என்று கீ்ர்த்திகாவை ஸ்ரீமதி கண்டித்துள்ளார். 10-ம் வகுப்பு என்பதால் படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறினாராம். இதனால் விரக்தி அடைந்த கீர்த்திகா, வீட்டின் மாடியில் தூக்குப்போட்டு உயிரைவிட்டது தெரியவந்தது.. இதைப் பார்த்த ஸ்ரீமதி, தான் திட்டியதால் தான் கீர்த்திகா இறந்துவிட்டார் என்று கருதி அவரும் குற்ற உணர்வில் இறந்தது விசாரணையில் தெரியவந்தது. பள்ளி மாணவியும், அவரது அத்தையும் ஒரே வீட்டில் உயிரைவிட்ட சம்பவம் மரக்காணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications