திமுக ஆட்சியில் திமுகவினரிடம் இருந்து பெண்களை காக்க வேண்டிய அவலம்! எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

"காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி" எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் இந்த பொம்மை முதல்வர் இருக்கிறார்.
தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்?
உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அது போல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் அவர் பல்வேறு கண்டனங்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு?
பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம்.
ஸ்டாலின் அவர்களே- "உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?" என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?
பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா?
ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது போல் சென்னை பாரிமுனையில் கத்தியுடன் இரு கும்பல் மோதி கொண்ட விவகாரத்திலும் அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது அவர் திமுக ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது என கண்டனம் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications