என் புள்ள உசுரோடதான் இருக்கா! செஞ்சி வழக்கில் தாயின் திடீர் நம்பிக்கை.. பின்னணியில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 24 நாட்களைக் கடந்து நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார்.

உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டது. அரசுப் பள்ளியிலேயே முகாம் அமைத்து தாய் பவானி, தந்தை வடிவேலு, பாட்டி, சிறையில் இருந்து எடுக்கப்பட்ட பழைய குற்றவாளி ராஜதுரை, அவரது கூட்டாளி அரவிந்த், சாமியார், பூசாரி, சுடுகாடுகள், காடுகள் எனப் பல முனைகளில் கிடுக்கிப்பிடி விசாரணைகள் நடத்தப்பட்டன.

villupuram gingee

கடந்த மூன்று வாரங்களாகவே அழுது புலம்பி, கைகூப்பி கதறி நின்ற தாய் பவானி, கடந்த இரண்டு நாட்களாக தனது உறவினர்களிடமும், ஊடகங்களிடமும் பேசி வரும் விதம் ஒட்டுமொத்த வழக்கிலும் ஒரு பெரிய ஆச்சரியத்தையும் புதிரையும் ஏற்படுத்தியுள்ளது. "என் புள்ளை கண்டிப்பா உயிருடன் பத்திரமாகத்தான் இருக்கிறாள்.. அவள் சீக்கிரமே எங்களிடம் வந்து சேருவாள்" என்று அசைக்க முடியாத முழு நம்பிக்கையோடு அவர் பேசி வருகிறார்.

இத்தனை நாட்களாக இல்லாத இந்த அதீத நம்பிக்கை திடீரென தாய்க்கு எங்கிருந்து வந்தது? திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்ற கேள்விகள் தற்போது செஞ்சி வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளன.

சிபிசிஐடி கொடுத்த ரகசிய சமிக்ஞையா?

வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி அதிகாரிகள், "இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நல்ல செய்தி வரும்" என்று குடும்பத்தினருக்கு நம்பிக்கை அளித்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தை மாயமான அன்று முதல் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள், ஆழமான கிணறுகள், ஏரிகள் மற்றும் பாறை இடுக்குகளில் தேடியும் உடலின் எந்தவொரு தடயமோ அல்லது ரத்தக்கறையோ சிக்கவில்லை. இது அதிகாரிகளுக்கும் மட்டுமல்லாது, குடும்பத்தினருக்கும் "குழந்தைக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் நேரிடவில்லை; குழந்தை உயிருடன் எங்கோ மறைத்து வைக்கப்பட்டுள்ளார்" என்ற முடிவை வலுப்படுத்தியுள்ளது. விசாரணையின் மிக முக்கியமான ஒரு ரகசிய முன்னேற்றத்தை அதிகாரிகள் குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டதன் விளைவாகவே தாய் இவ்வளவு உறுதியாகப் பேசுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கோவில் உத்தரவு

தாய் பவானி தனது வீட்டின் அருகே உள்ள சிவன் மற்றும் விநாயகர் கோவில்களுக்குச் சென்று தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்தார். அண்மையில் கிராமத்துக் கோவில் ஒன்றில் பூ கட்டிப் போட்டுப் பார்த்தபோதும், வழிபாட்டின்போதும், "குழந்தை உயிருடன் இருக்கிறாள்; கூடிய விரைவில் கிடைத்து விடுவாள்" என்று குறி சொல்லப்பட்டதாகவும் கிராம மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

பசி பட்டினியிலும், வதந்திகளாலும் நொந்துபோய்க் கிடக்கும் ஒரு தாய்க்கு, கடவுள் நம்பிக்கையும் ஆன்மீக ரீதியான சமிக்ஞைகளும் மிகப்பெரிய மன வலிமையைக் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

குழந்தை கடத்தப்பட்ட நபர்கள் குறித்த ரகசியத் தொடர்பா?

மற்றொருபுறம், இந்த வழக்கு ஆட்கடத்தல், சட்டவிரோத தத்து, அல்லது உள்ளூர் முன்விரோதம் காரணமாகக் குழந்தையை யாருக்காவது கைமாற்றிவிட்ட கோணத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

ஒருவேளை கடத்திய நபர்களிடமிருந்தோ அல்லது அவர்களின் தரப்பிலிருந்தோ குடும்பத்தினருக்கு மறைமுகமாக ஏதேனும் சமாதானப் பேச்சுகள் அல்லது "குழந்தை பத்திரமாக இருக்கிறாள்" என்ற தகவல் ரகசியமாக வந்து சேர்ந்ததா என்ற கோணத்திலும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. ஏனென்றால், ஆரம்பத்தில் கதறித் துடித்த தாய், இப்போது "என் மகளுக்கு எதுவும் ஆகவில்லை; அவள் உயிரோடு இருக்கிறாள்" என்பதை ஆணித்தரமாகச் சொல்வது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய விஷயமாகத் தெரியவில்லை.

தாயின் உளவியல்

கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் குடும்பத்தினரைப் பற்றித் தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன. "நாங்கள் 20 நாட்களாக வேலைக்குப் போகாமல் பசி பட்டினியில் கிடக்கிறோம்; தவறாகப் பேசாதீர்கள்" என்று பவானி கண்ணீர் பேட்டி அளித்திருந்தார்.

தங்கள் குடும்பத்தின் மீது விழுந்த களங்கத்தைத் துடைக்கவும், தனது குழந்தை உயிருடன் மீட்கப்படுவாள் என்ற நேர்மறையான எண்ணத்தைத் தனக்குள்ளேயே விதைத்துக் கொள்ளவும் ஒரு தாய் காட்டும் தாய்மை உணர்வின் வெளிப்பாடாகவும் இது இருக்கலாம் என்று மனநல ஆலோசகர்கள் கருதுகின்றனர்.

மர்மங்கள் உடையும் தருணம்

தாய் பவானியின் இந்த திடீர் வார்த்தை மாற்றம், புலனாய்வுத் துறையினரையும் கவனிக்க வைத்துள்ளது. உள்ளூர் எல்லைகளைத் தாண்டி நாமக்கல், கடலூர், பெங்களூரு என சிபிசிஐடி தனிப்படையினர் தீவிரத் தேடுதலில் ஈடுபட்டுள்ள இந்தச் சூழலில், தாயின் இந்த அதிரடி நம்பிக்கை வெறும் குருட்டு நம்பிக்கையா அல்லது பின்னணியில் ஏதேனும் ரகசியத் தகவல் சிக்கியுள்ளதா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் செஞ்சி சிறுமி ஹேமலதா மீட்கப்படும்போது அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+