திமுக அறிவிப்பை.. அப்படியே அமல்படுத்தும் தவெக அரசு! வனத்துறை விஷயத்தில் நோ பாலிடிக்ஸ்
சென்னை: கடந்த திமுக ஆட்சியில், நரிகளை பாதுகாக்க புதியதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த அறிப்பை தற்போது தவெக தலைமையிலான தமிழக அரசு அப்படியே அமல்படுத்த உள்ளதாக அறிவித்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, ஒரு காலத்தில் பரவலாக காணப்பட்ட நரிகள் தற்போது வெறும் 5 மாவட்டங்களுக்குள் மட்டுமே சுருங்கிவிட்டது. எனவே இதன் பாதுகாப்புக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு தற்போது நிதி ஒதுக்கியிருக்கிறது.

திமுக அரசின் அறிவிப்பை ஏற்ற தவெக அரசு
சுற்றுச்சூழல் சமநிலையை நிர்வகிப்பதில், வங்காள நதிகள் மற்றும் தங்க நரிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனவே இதன் பாதுகாப்புக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தற்போது தொடங்கி இருக்கிறது. கடந்த 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையின்போது, அப்போதைய வனத்துறை அமைச்சர் கே.பொன்முடி, நரிகளை பாதுகாக்க திட்டத்தை சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார்.
அதன்படி நரிகளுக்கான அச்சுறுத்தல்கள், வாழ்விட பயன்பாடு மற்றும் நரிகளின் பரவல் முறைகளை முழுமையாக கண்டறிந்து.. நீண்ட கால பாதுகாப்பு யுக்திகளை உருவாக்க தமிழ்நாடு அரசு இந்த ஆண்டில் ரூ.1.3 கோடியை ஒதுக்கீடு செய்து இருக்கிறது.
நரிகளின் முக்கியத்துவம்
இந்திய வங்காள நரி மற்றும் தங்க நரி ஆகிய இரண்டுமே வேட்டையாடும் விலங்குகள் ஆகும். இறந்த உடல்களை சாப்பிட்டு, துப்புரவாளர்களாகவும் இருந்து.. காடுகளின் சமநிலையை பாதுகாக்கின்றன. தற்போதைய சூழலில், இந்த இரு உயிரினங்களுக்கும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 அட்டவணை I கீழ் மிக உயர்ந்த சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபத்தில் வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் (AIWC) நடத்திய கணக்கெடுப்பில், கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நரிகளின் எண்ணிக்கை மற்றும் அவை வாழும் பரப்பளவு பெருமளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
நரிகள் முற்றிலுமாக அழிந்துவிட்ட மாவட்டங்கள்
இந்த ஆய்வின்படி, நரிகள் பல மாவட்டங்களில் முற்றிலும் அழிந்துவிட்டன. இன்றைய தேதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே உள்ளன. தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் மட்டும்தான் தற்போது நரிகள் பரவலாக காணப்படுவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. எனவே இவற்றை பாதுகாக்க.. உடனடி திட்டம் தேவை என்பதை உணர்ந்த தலைமை வனவிலங்கு காப்பாளர், ஆரம்ப திட்ட வரைவை அரசுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
1. அதன்படி, காப்புக்காடுகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கும் நரிகளின் முக்கிய வாழ்விடங்களை அடையாளம் காண வேண்டும்.
2. அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்க, மேம்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
3. சட்டவிரோத வேட்டையாடுதலை கட்டுப்படுத்த வேண்டும்.
4. பல்வேறு தரப்பினரிடையே இந்த உயிரினங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
5. சேலம் உயிரியல் பூங்காவில், நரிகளுக்கான பிரத்தியேக செயற்கை இனப்பெருக்க மையத்தை அமைக்க வேண்டும்.
என 5 அம்சங்களை அடக்கிய ஆரம்ப திட்ட வரைவை, தலைமை வனவிலங்கு காப்பாளர் கொடுத்திருந்தார். இந்த திட்டத்திற்கு ஆரம்பத்தில் ரூ. 2 கோடிக்கு நிர்வாகம் மற்றும் நிதி ஒப்புதல் வழங்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடு
ஆனால், 2025-26 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட கூடுதல் மதிப்பீடுகளில் சேர்த்து.. சட்டப்பேரவையின் ஒப்புதலை பெற வேண்டிய இருந்தது. பின்னர் தலைமை வனவிலங்கு காப்பாளர், கடந்த நிதியாண்டில் செலவழிக்கப்படாத தொகையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கேட்டு.. ரூ.92.5 லட்சத்திற்கான முன் முடிவு அனுப்பினார். அதை பரிசீலித்த அரசு, இந்த ஆண்டில் மொத்தம் ரூ.1.3 கோடியை நிதியாக ஒதுக்கி அறிவித்துள்ளது.
வனத்துறைக்கு காத்திருக்கும் சவால்கள்
நிதி ஒதுக்கப்பட்டாகிவிட்டது, திட்டத்தை அரசு ஏற்றுக் கொண்டது! ஆனால், இப்பொழுது வனத்துறைக்குதான் பெரிய சவால் இருக்கிறது. நரிகள் காடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியில் வாழக்கூடியவை. எனவே, மனித விலங்கு மோதல்களை தவிர்த்து.. இவற்றை பாதுகாக்க வனத்துறை மட்டுமின்றி பல்வேறு அரசு துறைகளில் கூடுதல் ஒருங்கிணைப்பும் மிகவும் அவசியமாகிறது.
ஒரு காலத்தில் மனிதர்களுக்கு ஆபத்தாக கருதப்பட்ட நரிகள் தற்போது, முற்றிலுமாக காணாமல் போயிருக்கின்றன. இவற்றை மீட்டு கொண்டுவரும்போது.. மக்கள் அதை அச்சுறுத்தலாக பார்த்துவிடக்கூடாது. மறுபுறம் சடங்குகள் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள், நரிகளை வேட்டையாடுவதை ஊக்குவிக்க கூடாது. இதையெல்லாம் வனத்துறை செய்ய வேண்டும். வனத்துறை இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறது என்பது சூழலியலாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
