புயல் ஓய்ந்தும் வடியாத வெள்ளம்.. விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக மிக அதிக பாதிப்புகளை சந்தித்த மாவட்டங்களில் விழுப்புரம் முதன்மையானதாகும். புயல் ஓய்ந்த பின்னரும் கூட இன்னும் இம்மாவட்டத்தில் மழை வெள்ளம் வடியவில்லை. இந்நிலையில் மீட்பு பணிகள் காரணமாக நாளை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் என 3 மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வீடு, வாசலை இழந்து, உற்றார் உறவினர்களை இழந்து மக்கள் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதேபோல, சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.10,000, முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு பதிலாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டித்தரப்படும் எனவும் கூறியுள்ளார்.

தவிர மூன்று மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் மீட்பு பணிகள் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் குறிப்பிட்ட 17 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடலூரில் நாளை பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக இன்று விடுக்கப்பட்டிருந்த வானிலை அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 04-12-2024 மற்றும் 05-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06-12-2024 முதல் 10-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மின்வாரியத்திற்கு கடுமையான இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். குறிப்பாக ரூ.3000-ரூ.5000 கோடி வரை மின்வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் மின்வாரியத்தின் கடன் சுமை ரூ.1.80 லடசம் கோடியை எட்டும் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த புயல் மழை வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் வலியுறத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications