பொன்முடிக்கு குடைச்சலாக வந்து நின்ற ஜெயக்குமார்.. மனுவை ‘டிஸ்மிஸ்’ செய்த நீதிபதி!
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் சாட்சியாக சேர்த்துக்கொள்ளக் கோரி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2006முதல் 2011ஆம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சியின்போது உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உள்ளிட்டோர் 8 பேர் மீது கடந்த 2012ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அவர்களில் 9 பேர் பிறழ் சாட்சி ஆனார்கள்.
ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன், பூத்துறை கிராம உதவியாளர் ரமேஷ், முன்னாள் கிராம உதவியாளர் கோபாலகண்ணன் உள்ளிட்ட 9 பேர், இவ்வழக்கு சம்பந்தமான கோப்புகளில் தங்களிடம் அப்போதிருந்த உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும், தங்களுக்கு இந்த முறைகேடு பற்றி எதுவும் தெரியாது என்று கூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தனர்.
பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் 9 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், முன்னாள் அரசு வக்கீல் சீனிவாசன் மூலமாக கடந்த 8ஆம் தேதியன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
ஜெயக்குமார் தனது மனுவில், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை தடுக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிடவும் இந்திய பிரஜையான அனைவருக்கும் உரிமை உள்ளது. எனவே அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக் கோரியிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை.
இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயக்குமாரின் கோரிக்கையை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா நிராகரித்தார். அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கக்கொரிய ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications