Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அரவான் களப்பலி..ஒப்பாரி வைத்து அழுத திருநங்கைகள்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமாக இன்றைய தினம் திருத்தேரோட்டமும் அதனையடுத்து அரவான் களப்பலியும் நடைபெற்றது. அரவானை கணவனாக நினைத்து பூசாரி கையினால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் இன்று தாலியை இறக்கி ஒப்பாரி வைத்து அழுதனர்.

திருநங்கைகளின் சமூகத்திற்கென்றே தனித்துவ அடையாளமாக விளங்கும் இத்திருவிழா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமியை ஒட்டி 18 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா ஏன் கொண்டாடப்படுகிறது என்பதற்கு புராண கதை ஒன்று உள்ளது. இது மகாபாரத கதையோடு தொடர்பு உடையது.

Koovagam Koothandavar temple transgender festival Today Aravan Kalapali

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் மூண்டது. அந்தப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமானால், போருக்கு முன்பாக யுத்த தேவதையை திருப்திப்படுத்த களப்பலி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதற்கு 32 சாமுத்திரிகா லட்சணம் பொருந்திய ஆண் மகன் வேண்டும். இதற்கு தகுதியானவர்களாக இருந்தவர்கள் அர்ஜுனன், கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனுக்கும், நாகக்கன்னிக்கும் பிறந்த அரவான் ஆகியோர் மட்டுமே.
அர்ஜுனனும், கிருஷ்ணனும்தான் இந்த போருக்கு முக்கியமானவர்கள். அவர்கள் இருவரையும் இழக்க முடியாது என்பதால், அரவானை பலியாக்க முடிவு செய்யப்பட்டது.

அர்ஜுனனும், கிருஷ்ணனும் அரவானிடம் இதுபற்றி பேசினர். அரவானும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் ஒரே ஒரு நிபந்தனையும் விதித்தார். அதாவது, என் இறுதி ஆசையாக திருமண வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னரே பலிக்களம் புகுவேன் எனக்கூறுகிறார். ஆனால் அரவானை கணவனாக ஏற்க எந்தவொரு பெண்ணும் முன்வரவில்லை.

Koovagam Koothandavar temple transgender festival Today Aravan Kalapali

விடிந்தால் பலியாகப்போகும் ஒருவனை மணக்க எந்த பெண்தான் சம்மதிப்பாள். இப்படிப்பட்ட சூழலில் கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்துகொண்டார். ஓர் இரவு இல்லற வாழ்விற்கு பிறகு மறுநாள், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார். அதன் பிறகு அரவானை மணமுடித்த மோகினி விதவைக்கோலம் பூணுகிறாள். இதுதான் அரவான் எனப்படும் கூத்தாண்டவரின் வரலாறு.

இந்த கதையின் அடிப்படையில் தங்களை கிருஷ்ணரின் அவதாரமான மோகினியாக உணரும் திருநங்கைகள், திரளாக கூடி கொண்டாடும் விழாவாக கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா இருக்கிறது. இதனாலேயே இக்கோவிலை திருநங்கைகள் தங்களின் குல தெய்வமாக கருதுகின்றனர்.

ஆண்டுதோறும் அரவானை வழிபட டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூரு உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து கூடுவார்கள். அரவான் களப்பலியை நினைவு படுத்தும் விதமாக இரவு சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்து குவிந்துள்ளனர். நேற்றைய தினம் கோவில் வாசலில் அனைத்து திருநங்கைகளும் தங்களை புதுமணப் பெண்கள்போல் ஆடை அணிகலன்களால் அலங்கரித்துக் கொண்டனர். கோவிலின் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்ட பிறகு தங்கள் கணவனான அரவானை நினைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.

நேற்றிரவு விடிய விடிய கும்மியடித்து ஆட்டமும், பாட்டமுமாக மகிழ்ச்சியாக பாட்டு பாடி கொண்டாட்ட மனநிலையில் இருந்தனர். இன்றைய தினம் காலையில் கோவிலில் உள்ள அரவான் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து ஊர்வலமாக அரவான் சிரசு எடுத்து வரப்பட்டது. அப்போது திருநங்கைகள் சுற்றி நின்று கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

இதனையடுத்து அரவான் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதலின்பேரில் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். அப்போது விவசாயிகள் வேண்டுதலின்பேரில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது சூறை விட்டு கற்பூரம் ஏற்றி பயபக்தியுடன் வணங்கினர். அது மட்டுமின்றி 20 அடி நீள பூமாலைகளையும், வள்ளவாட்டுகளையும் அரவான் மீது வீசி பயபக்தியுடன் வணங்கினர்.

தேர் ஊர்வலம் புறப்பட்டு வந்த பின்னர், தேர் அழிகளம் நோக்கி சென்றது அப்போது புதுமணப் பெண்கள்போல் தங்களை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு கூத்தும், கும்மாளமுமாக இருந்த திருநங்கைகள் சோகமாக கண்ணீர் விட்டு உணர்ச்சி வசப்பட்டு ஒப்பாரி வைத்து அழுதனர். மூன்று நான்கு திருநங்கைகள் ஒன்றாக இணைந்து வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டபடி தேரை பின் தொடர்ந்தனர்.

Koovagam Koothandavar temple transgender festival Today Aravan Kalapali

அரவான் களப்பலி கொடுக்கப்பட்ட உடன் திருநங்கைகள், சுமங்கலி கோலத்தை துறந்தனர். கோவில் பூசாரிகள், திருநங்கைகளின் கையிலிருக்கும் வளையல்களை உடைத்து நொறுக்கி கழுத்தில் அணிந்திருக்கும் தாலிகளை கழற்றினர். பின்னர் திருநங்கைகள் அனைவரும், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தலை குளித்து வெள்ளாடை அணிந்து விதவைக்கோலம் பூண்டு சோகமயமாக தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ளும் திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண் பக்தர்கள், தங்களுக்கு திருமணமாக வேண்டும் என்றும், குழந்தை இல்லாதவர்கள் தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்றும் கூத்தாண்டவரிடம் மனமுருக வேண்டிக்கொள்வார்கள்.

இந்த வேண்டுதல் நிறைவேறியதும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் சித்திரை திருவிழாவின்போது இக்கோவிலுக்கு வந்து திருநங்கைகளைப்போல் கோவில் பூசாரி கையினால் தாலி கட்டிக்கொள்வார்கள். பின்னர் மறுநாள் அரவான் களப்பலிக்கு பிறகு திருநங்கைகளைப்போல் மற்ற பக்தர்களும் தாலியை, பூசாரி கையால் அறுத்துக்கொண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்வது இங்கு சடங்காக இருந்து வருகிறது. கூவாகம் கூத்தாண்டவரை தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+