அமைச்சரை மேடைக்கு அழைக்காத சக அமைச்சர்! விழுப்புரத்தில் நடந்த விநோதம்! இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் அமைச்சரை சக அமைச்சர் ஒருவரே மேடைக்கு அழைக்காத நிகழ்வு நடந்துள்ளது.
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என சூரியன் திரைப்படத்தில் வரும் நடிகர் கவுண்டமணியின் வசனத்தை நினைவூட்டும் வகையில் இது அமைந்திருந்தது.
அதன் விவரம் வருமாறு;
ஆகஸ்ட் 16ல் தொடங்கும் பொறியியல் கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

பட்டமளிப்பு விழா
விழுப்புரம் மாவட்டம் மைலத்தில் இயங்கி வரும் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 80 -வது ஆண்டு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும், சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அழைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் இருவருமே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.

விழா ஆரம்பம்
கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற அமைச்சர் பொன்முடி மேடையில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிக் கொண்டிருக்க மற்றொரு அமைச்சரான செஞ்சி மஸ்தான் கீழே பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார். இதனைப் பார்த்தும் அமைச்சர் மஸ்தானை வாங்க மேடைக்கு என ஒரு வார்த்தை அழைக்கவில்லையாம் அமைச்சர் பொன்முடி. இதனிடையே தர்ம சங்கடமான சூழலில் சிக்கிக் கொண்ட கல்லூரி நிர்வாகத்தினர், அமைச்சர் மஸ்தானை மேடையேற்றினால் மற்றொரு அமைச்சரான பொன்முடி கோபித்துக் கொள்வாரோ என செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இரண்டு அமைச்சர்கள்
இதனிடையே முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் கல்லூரி நிர்வாகத்தினர் மீது கோபித்துக்கொள்ளாமல் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து பட்டமளிப்பு விழா முடியும் வரை பொறுமையாக அங்கிருந்துவிட்டு அதன் பிறகு புறப்பட்டுச் சென்றிருக்கிறார் அமைச்சர் செஞ்சி மஸ்தான். விழுப்புரம் என்றில்லை ஒரு மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருக்கிற எல்லா மாவட்டங்களிலும் ஏறத்தாழ இதே போன்ற பவர் பாலிடிக்ஸ் தான் நடக்கிறது.

ஆதங்கக் குரல்
என்ன இருந்தாலும் சக அமைச்சர் ஒருவரை அமைச்சர் பொன்முடி இவ்வாறு நடத்திய விதம் ஏற்கத்தக்கதல்ல என ஆதங்கப்படுகிறார்கள் மஸ்தானின் ஆதரவாளர்கள். இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் அறிஞர் அண்னா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தன்னுடன் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனையும் பொன்முடி மேடையில் நிறுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.