மீண்டும் கள்ளச்சாராய பலி.. விழுப்புரத்தில் ஒருவர் இன்று உயிரிழப்பு! இருவருக்கு தீவிர சிகிச்சை!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் கள்ளச்சாராயம் குடித்து இன்று பலியாகியுள்ளார். கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய பலி நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் அண்மையில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் போலீசார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் முக்கிய குற்றவாளிகள் 5 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய்நல்லூர் அருகே உள்ள டி. குமாரமங்கலத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் புதுச்சேரி மாநிலமான மடுக்கரை பகுதியிலிருந்து பாக்கெட் சாராயம் வாங்கி வந்து கொடுத்துள்ளார். அதனை ஜெயராமன், முருகன், சிவச்சந்திரன் ஆகியோர் குடித்துள்ளனர். பாக்கெட் சாராயம் குடித்த ஜெயராமன் உள்ளிட்ட மூவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது.
இதனை அடுத்து, உடனடியாக அவர்களது உறவினர்கள் மூவரையும் அருகில் உள்ள இருவேல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சையாக முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட ஜெயராமன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஜெயராமன் உயிரிழந்ததால் பாக்கெட் சாராயம் வாங்கி வந்து கொடுத்த முருகனை திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் பேசுகையில், "ஜெயராமன், முருகன் மற்றும் சிவச்சந்திரன் ஆகிய மூவரும் புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்த கள்ளச்சாராயத்தை குடித்ததாக தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரில் புதுச்சேரியில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்தது முருகன் தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
அதன் அடிப்படையில், முருகன் மீது வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதற்கிடையில் தான், சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இது குறித்தும் விசாரணை நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications