PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?
விழுப்புரம்: தமிழக சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவிக்கவுள்ள நிலையில் தவெகவின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் நேற்றைய தினம் (மார்ச் 16) தைலாபுரம் தோட்டத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை அது போன்று எந்த ஒரு சந்திப்பும் நடைபெறவில்லை.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகிய 4 முனை போட்டிகள் இருக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் பாமக தற்போது இரண்டாக பிரிந்துள்ளது.
ராமதாஸ் தலைமையில் ஒன்று, அன்புமணி தலைமையில் ஒன்று! அன்புமணி பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. அவர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டார். அது போல் ராமதாஸ் தலைமையிலான பாமக யாருடன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ராமதாஸ் சில நாட்களாக திமுகவை விமர்சிக்காமல் இருந்ததால் அவர் திமுக கூட்டணியில் இணையலாம் என சொல்லப்பட்டது. ஆனால் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
பாஜக, பாமக அங்கம் வகிக்கும் கூட்டணியில் இடம்பெறமாட்டோம் என பல காலமாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்து வந்தார். அது போல் ராமதாஸ் பாமக, திமுக கூட்டணியில் இணைவது குறித்து செய்தியாளர்கள் சந்திப்புகளில் திருமாவளவனிடம் கேட்ட போது நிலையில், பாமக கூட்டணிக்கு வந்தால் தாங்கள் வெளியேறுவோம் என கூறியிருந்தார். இதனால் திமுகவும் ராமதாஸை சேர்க்க எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ராமதாஸ் மார்ச் 16ஆம் தேதியான நேற்று யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு தவெக நிர்வாகி செங்கோட்டையன் செல்கிறார் என தகவல்களும் கிடைத்தன. இதனால் ராமதாஸ், தவெகவுடன் கூட்டணி அமைக்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த தகவல் பரவி கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக இது போல் ஒரு சந்திப்பு நடைபெறவில்லை என்பது தெரிகிறது.
அதே வேளையில் யாருடனும் கூட்டணி பேசவில்லை என தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்திருந்தார். அதில் ராமதாஸ் பெயரையும் குறிப்பிட்டு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து சிடிஆர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தவெக யாருடனும் கூட்டணி பேசவில்லை. எனவே இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். பாஜக, அதிமுக, ராமதாஸ், சசிகலா ஆகியோருடன் தவெக எந்த நிலையிலும் கூட்டணி பேச்சு நடத்தவில்லை. எனவே ஊடகங்கள் இது போன்ற வதந்தியை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் தற்போது வரை தவெக யாருடனும் கூட்டணிக்கு செல்லவில்லை என்பதே அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும்.












Click it and Unblock the Notifications