விக்கிரவாண்டி அன்புஜோதி ஆசிரமத்தின் பின்னணியில் செல்வாக்கு மிக்கவர்களா? பாமக, எஸ்டிபிஐ பகீர் கேள்விகள்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் ஆசிரமத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழக அரசு சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் ஆசிரமத்தில் சித்திரவதை, பாலியல் கொடுமை நடந்திருப்பதாக வெளியான தகவல் குறித்து தமிழக அரசு சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்! என எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தி உள்ளது. இதேபோல் பாமக நிறுவனர் ராமதாசும் இதன் பின்னணியில் செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளனரா என்று கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்புஜோதி என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற தனியார் ஆசிரமத்தில் தமிழகம் உள்பட அண்டை மாநிலங்களை சேர்ந்த சுமார் 143 பேர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்புனர்வு
மேலும், அங்கு இளம் பெண்களுக்கு போதை ஊசி செலுத்தி அவர்களை பாலியல் வன்புணர்ச்சி செய்தும், ஆசிரமத்தில் உள்ளவர்கள் மீது கடுமையான மனிஉரிமை மீறல்களும் நடத்தப்பட்டுள்ளன. மட்டுமின்றி ஆசிரமத்தில் உள்ளவர்கள் பலரும் அவ்வப்போது மாயமாகியுள்ளனர். இவர்கள் கொலை செய்யப்பட்டார்களா அல்லது அவர்கள் உடல் உறுப்பு திருட்டுக்காக கடத்தப்பட்டார்களா என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

முழு பின்னணி என்ன
இந்த தனியார் ஆசிரமம் சட்டவிரோதமாக அனுமதியின்றி சுமார் 15 ஆண்டுகாலம் செயல்பட்டு வந்துள்ளதோடு, மிகப்பெரும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஆகவே, தமிழக அரசு இந்த ஆசிரமத்தின் முழு பின்னணியை கண்டறிய சிறப்புக் குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். மேலும், இதில் தொடர்புடைய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான காப்பகங்களிலும் முறையான ஆய்வு மேற்கொண்டு இதுபோன்ற மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குரங்குகளை ஏவி
பாமக நிறுவனர் ராமதாஸ் விக்கிரவாண்டி தனியார் ஆசிரமம் குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த குண்டலப்புலியூரில் செயல்பட்டு வந்த அன்புஜோதி என்ற ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடத்தப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பெரும் அதிர்ச்சியளிக்கிறது! ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தோர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்; குரங்குகளை ஏவி கடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தையும் கடந்து ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 50 பேர் மாயமாகி விட்டதாக கூறப்படுவதை பார்க்கும் போது அங்கு பெரும் குற்றங்கள் நடந்திருக்கக் கூடும்!

செல்வாக்கு உள்ளவர்களா?
ஆதரவற்றோர் இல்லம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்படியானால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் என்ன தான் செய்து கொண்டிருந்தன? இதன் பின்னணியில் செல்வாக்கு மிக்கவர்கள் உள்ளனரா? என்பது கண்டறியப்பட வேண்டும், இல்லத்திலிருந்து எவ்வளவு பேர் கடத்தப்பட்டனர்? எவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டனர்? என்பன உள்ளிட்டவை கண்டறியப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் தனது பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications