தோல்வி பயத்தை காட்டிட்டோம்.. மன நிறைவா இருக்கு! விக்கிரவாண்டி தேர்தல் முடிவு குறித்து பாமக பாலு
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் திமுகவுக்கு பயத்தை காட்டிவிட்டோம் என்றும் இதுவே மன நிறைவாக இருப்பதாகவும் பாமக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற நா.புகழேந்தி மரணமடைந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 20வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக 1,23,195 வாக்குகளை பெற்றிருக்கிறார்.

இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை. எனவே பாஜக ஆதரவுடன் பாமக களத்தில் இறங்கியது. தேர்தல் முடிவுகளின்படி பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,030 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,009 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து பாமக வழக்கறிஞர் பாலு, "தேர்லில் திமுகவுக்கு தோல்வி பயத்தை காட்டிவிட்டோம்" என்று கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, "விக்கிரவாண்டி தொகுதி மக்கள் தவறான முடிவை எடுத்திருக்கிறார்கள். வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற திமுகவுக்கு நன்றி சொல்வதை விட, வாக்குக்கு பணம் கொடுத்தால்தான் வெற்றிப் பெற முடியும் என்கிற அளவுக்கு தோல்வி பயத்தை உருவாக்கிய பாமகவுக்குத்தான் தொகுதி மக்கள் நன்றி சொல்ல வேண்டும்.
வாக்காளர்களுக்கு தலா ரூ.5000 என கொடுத்து திமுக வெற்றிப்பெற்றிருக்கிறது. ஆனால், நாங்கள் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் ஜனநாயகத்தையும், கூட்டணி கட்சியையும், எங்களது தொண்டர்களையும் நம்பி நாங்கள் தேர்தலை எதிர்கொண்டோம். இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சித்தான் வெற்றிப் பெறும் என்கிற சிந்தனை இருந்து வந்த நிலையில், இதனை மாற்றுவதற்காக இந்த தேர்தலில் நாங்கள் மேற்கொண்ட முயற்சி எங்களுக்கு மன நிறைவை தருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications