விழுப்புரம் அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கி வீடியோ எடுத்த தாய்.. கொலை முயற்சி வழக்கில் கைது
விழுப்புரம்: 2 வயதே ஆன குழந்தையைப் பெற்ற தாயே கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, துளசி என்ற அந்த பெண்ணை ஆந்திர மாநிலம் சித்தூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதாகும் வடிவழகன்.
இவருக்கும் ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

தகராறு
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்படி தகராறு ஏற்படும்போதெல்லாம் தனது இளைய பிள்ளையை அடித்து அதை வீடியோவாக எடுத்து வைத்து கொள்வார். அப்படிக் கடந்த பிப்ரவரி மாதம் குழந்தையை அடித்ததில் வாயில் காயம் ஏற்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு மோசமாகத் தாக்கியுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் இந்தக் காயம் குறித்துக் கேட்டபோது, குழந்தை கீழே விழுந்து அடிப்பட்டதாகக் கூறி சமாளித்துள்ளார். இதனிடையே சில வாரங்களுக்கு முன், துளசியை ஆந்திரா சித்தூரில் உள்ள தாயின் வீட்டுக்கே வடிவழகன் அனுப்பிவிட்டார்.

வைரல் வீடியோ
இந்தச் சூழலில் கடந்த இரண்டு நாட்களாகத் துளசி தனது இளைய மகனைக் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. 2 வயதே ஆன அக்குழந்தையைத் துளசி கைகளிலும், காலணியைக் கொண்டும் மிகக் கடுமையாக தாக்குகிறார். பார்ப்போரைக் கலங்கச் செய்யும் இந்த வீடியாக்கள் சமூக வலைத்தளங்களில் வரலானதைத் தொடர்ந்து, துளசியைக் கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர்.

துளசி கைது
இது குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வடிவழகன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சித்தூர் மாவட்டம் சென்ற போலீசார் அங்கு ராம்பள்ளியில் வைத்து துளசியைக் கைது செய்தனர். துளசியிடமிருந்து விவாகரத்து பெறவும் தேவையான சட்ட நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் வடிவழகன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications