சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரையும் விடத் தயார்.. ராமதாஸ் பேச்சால் பதறிப் போன நிர்வாகிகள்!
விழுப்புரம் : வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரையும் விடத் தயாராக உள்ளேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற பாமக வலியுறுத்தி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், பின்னர் நீதிமன்ற தீர்ப்பால் இந்தச் சட்டம் நிறைவேறவில்லை.
இந்நிலையில், வன்னியர் சமூகத்தவருக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றுமாறு திமுக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது பாமக. இந்நிலையில், திண்டிவனத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், "தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி பணம் கொடுக்காது. நீங்களும் செலவிடவேண்டாம். மக்களை நம்புங்கள். தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடத்தை நாம் தான் நிரப்பவேண்டும். நம்மிடம் உள்ளது போல மனித வளம் எந்தக் கட்சியிலும் கிடையாது. வன்னியர் சங்கமும், பாமகவும் இரண்டு தண்டவாளங்களாக இணைந்து நில்லுங்கள்.
தமிழ்நாட்டில் நாம் தமிழை வளர்க்க முன்வராவிட்டால் யார் வளர்ப்பார்கள்? தமிழை வளர்க்க ஆர்வம் காட்டாவிட்டால் நீங்கள் இங்கிலாந்திலிருந்து வந்த வெள்ளைக்காரன் என்று சொல்லிவிடுவேன். ஜாக்கிரதை 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க தாமதம் ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரையும் விடத் தயாராக உள்ளேன். " என்று பேசினார்.
இவ்வளவு காலம் போராடிவிட்டேன்.. இட ஒதுக்கீட்டுக்காக உயிரையும் விடத் தயார் என பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதையடுத்து, "அது வேண்டாங்கய்யா" என நிர்வாகிகள் அவரைச் சமாதானம் செய்தனர்.












Click it and Unblock the Notifications