பாமகவின் மூன்றாம் தலைமுறை அரசியல்வாதி! களத்தில் சம்பவம் செய்யும் சங்கமித்ரா! அடுத்து கட்சியில் பதவி?
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியாக உருவெடுத்து இருக்கிறார் அன்புமணி ராமதாசின் மகளான சங்கமித்ரா அன்புமணி என பாட்டாளி மக்கள் கட்சியினர் சமூக வலைதளங்களில் ஃபயர் விட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்து இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதை அடுத்து அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலோடு அந்த தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் முடிந்த பிறகு அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தங்கள் கட்சி எம்எல்ஏ மரணம் அடைந்ததால் மீண்டும் அங்கு திமுகவே போட்டியிடும் என அக்கட்சி தலைமை அறிவித்ததோடு அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்தது. அதே நேரத்தில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பண பலம், ஆளுங்கட்சி அராஜகம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளை காரணம் காட்டி தேர்தலில் இருந்து பின் வாங்கியது. இதையடுத்து பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக அங்கு போட்டியிடுகிறது.
அக்கட்சியின் சார்பில் அன்னியர் சி.அன்புமணி வேட்பாளராக களம் இறக்கப்பட்டு இருக்கிறார். இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக ஹோமியோபதி மருத்துவரான அபிநயா களமிறங்கி இருக்கிறார். இதையடுத்து தற்போது அந்த தேர்தலில் மும்முனை போட்டி உருவாகி இருக்கிறது. தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சித் தலைவர்கள் விக்கிரவாண்டியில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணிக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸின் ஒட்டுமொத்த குடும்பமும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவருமான அன்புமணி ராமதாஸ், அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி, அன்புமணியின் மகள் சங்கமித்ரா அன்புமணி ஆகியோர் விக்கிரவாண்டி தொகுதியில் ஊர் ஊராக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அரசியல் அனுபவம் உள்ளவர்கள் என்றாலும் அவரது மனைவியான சௌமியா அன்புமணி கடந்த தேர்தலில் தான் முதன்முதலாக தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். அதே நேரத்தில் இளம் தலைமுறை அரசியல்வாதியாக பார்க்கப்படும் சங்கமித்ரா தர்மபுரி தொகுதியில் தனது தாய்க்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
குறிப்பாக முதியோர்கள், பெண்களை சந்தித்து வாக்கு கேட்பது, கடை கடையாகச் சென்று துண்டு பிரசுரம் விநியோகிப்பது, மதுவிலக்கு உள்ளிட்டவை குறித்து அவரது பிரச்சாரம், இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் சௌமியா அன்புமணி தோல்வி அடைந்தபோதிலும் தற்போது தங்கள் கட்சி வேட்பாளர் விக்கிரவாண்டி தொகுதியில் களமிறங்கி இருக்கிறார் என மீண்டும் பிரசாரத்தில் இறங்கியுள்ளார் சங்கமித்ரா அன்புமணி.
கடந்த தேர்தலை போலவே மதுவிலக்கு குறித்து அவர் அழுத்தமான வாதங்களை முன் வைத்து வருகிறார் குறிப்பாக பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் அவர் துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார், மேலும் இந்த தேர்தலில் திமுகவுக்கு தங்களைப் பார்த்து பயம் வந்துவிட்டது என பேசினார். அழுத்தமான பேச்சு எதார்த்தமான செயல்கள் மூலம் விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்களை அவர் வெகுவாக கவர்ந்திருப்பதாக கூறுகின்றனர்.
ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸும் இரண்டு தலைமுறைகளாக பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாம் தலைமுறை அரசியல்வாதியாக சங்கமித்ரா அன்புமணி உருவாகியிருப்பதாகக் கூறுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். விரைவில் அவருக்கு கட்சியில் பொறுப்பு கூட வழங்கப்படலாம் எனவும் பேசிக் கொள்கின்றனர்.
தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருக்கும் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே இளைஞரணி தலைவராக இருந்து கட்சியின் தலைவராக உருவெடுத்தவர். எனவே அவரது வாரிசாக சங்கமித்ரா அன்புமணியும் இளைஞர் அணி பதவியில் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதற்கான அறிவிப்புகளும் இருக்கலாம் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.












Click it and Unblock the Notifications