கடுகடுவென்ற முகம்.. சிடுசிடுவென்ற பேச்சு! தலைமை ஆசிரியர் மகன் அமைச்சரான கதை! யார் இந்த பொன்முடி?
விழுப்புரம்: சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் மகன் எப்படி அமைச்சரானார் என்பது பற்றியும் பொன்முடியின் பின்னணி குறித்தும் இங்கே பார்க்கலாம்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் பொன்முடி. இவரது தந்தை கந்தசாமி பள்ளி தலைமை ஆசிரியராகவும் தாயார் மரகதம் பள்ளி ஆசிரியையாகவும் இருந்தவர்கள். இதனால் தான் தங்கள் மூத்த பிள்ளையான பொன்முடியை அந்தக் காலத்திலேயே டபுள் டிகிரி படிக்க வைத்தார்கள். பொன்முடியும் படிப்பில் கெட்டிக்காரர் என்பதால் எம்.ஏ., பி.எட்., எம்.பில், பி.ஹெச்.டி, என பல பட்டப்படிப்புகளை படித்து கல்லூரி விரிவுரையாளராக 15 ஆண்டுகாலம் பணியாற்றினார்.
திராவிடர் கழகம் மேடைகளில் பேசிவந்த பொன்முடி தன்னை நாத்திகராக அடையாளப்படுத்திக் கொண்டார். தேர்தல் அரசியலில் பங்கேற்காத திராவிட கழகத்தில் இருந்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்துவிடும் என திமுகவுக்கு ஷிப்ட் ஆனார். பொன்முடியின் படிப்பும், அவரது துணிச்சலான கணீர் பேச்சும் கருணாநிதியை ஈர்த்தது. செஞ்சி ராமச்சந்திரனுக்கு போட்டியாக பொன்முடிக்கு எம்.எல்.ஏ. சீட், அமைச்சர் பதவி எனக் கொடுத்து அரசியலில் வளர்த்துவிட்டார்.
வன்னியர் சமுதாய மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதியில் மைனாரிட்டி சமுதாயத்தை சேர்ந்த பொன்முடிக்கு அதி முக்கியத்துவம் கொடுத்தார் கருணாநிதி. செஞ்சி ராமச்சந்திரன் திமுகவிலிருந்து வெளியேறி வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு சென்றதற்கு பொன்முடி தான் காரணம். கட்சியில் தனக்கெதிரானவர்களை ஓரங்கட்டி தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார் பொன்முடி. சட்டசபையில் அடங்காத காளையாக அலறல் குரலோடு பேசி ஜெயலலிதாவையே நேருக்கு நேர் எதிர்த்தார் பொன்முடி.
இது போதாதா, கருணாநிதியும், ஸ்டாலினும் பொன்முடியை கொண்டாடத் தொடங்கினார்கள். தலைமையிடம் கிடைத்த நெருக்கத்தால் தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மனநிலைக்கு வந்த பொன்முடி, கடந்த காலங்களில் பரிந்துரை, சிபாரிசு என செல்பவர்களை ஏகத்துக்கும் ஒருமையில் பேசி கடுகடுப்பு காட்டுவார். இதனாலேயே கட்சிக்காரர்கள் பொன்முடி அறை பக்கமே போகமாட்டார்கள். அதேபோல் பேச்சிலும் நக்கல் நையாண்டி இருக்கும்.
சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை(சில மாதங்க மட்டும்), கனிமவளத்துறை, உயர்கல்வித்துறை, உள்ளிட்ட துறைகளை திமுக ஆட்சிக்காலங்களில் அவர் வகித்திருக்கிறார். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ரெஷிடென்சியல் பள்ளி என பல கல்வி நிறுவனங்களை பொன்முடி குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இதனிடையே நாளைய தினம் வெளியாகும் தீர்ப்பை தொடர்ந்து பொன்முடி தனது அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications