உதயநிதி ஸ்டாலின் பேனரை கிழித்து எறிந்த பாமகவினர்.. 3 பேரை தட்டித் தூக்கிய போலீசார்!
விழுப்புரம்: பாமக சார்பில் விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, உதயநிதி ஸ்டாலின் புகைப்படம் இடம்பெற்ற திமுக பேனர் கிழிக்கப்பட்ட நிலையில், அந்த பேனரை கிழித்த 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் உச்சம் பெற்ற நிலையில், இருவரும் தனித்தனி அணியாகச் செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கி வருகிறார் ராமதாஸ். இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில் வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நேற்று முன் தினம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமகவினர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அன்புமணி ராமதாஸுக்கு பாமக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி, பின்தங்கிய சமுதாயமான வன்னியர் சமூகத்தை முன்னேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது முதல் கட்ட போராட்டம்தான். வன்னியர்கள் இந்த தேர்தலில் திமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும். வன்னியர்கள் 23 பேர் திமுகவில் எம்எல்ஏவாக உள்ளனர். அதில் 4 அமைச்சர்கள் உள்ளனர். 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுக்கு கொஞ்சமாவது உணர்வு இருக்கிறதா? இது சமூகநீதி பிரச்சினை. திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது என ஆவேசமாகப் பேசினார்.
இதற்கிடையே பாமக போராட்டத்தின் போது பாமக தொண்டர்கள் சிலர் அங்கு வைக்கப்பட்டிருந்த திமுக பேனரில் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தின் மீது காலணியை வீசியது மட்டுமல்லாமல் அந்த பேனரை கிழித்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பாமகவை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications