எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யாத ஒரே ஆள்.. கிண்டல் செய்த உதயநிதி ஸ்டாலின்!
விழுப்புரம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்யாத ஒரே ஆள் அமித்ஷா மட்டும் தான் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமித்ஷாவுக்கு எதிராகவே மூச்சுவிடுவதற்கே எடப்பாடி பழனிசாமி பயப்படுவதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், அதிமுக பாஜகவின் கிளை அமைப்பாக மாறிவிட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்த வகையில் விழுப்புரத்தில் கிளை செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இதில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், 11.9 சதவிகித வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டின் உரிமையை பறிப்பதை தவிர, வேறு எந்த வேலையையும் பாஜக செய்யவில்லை. SIR பணிகள் மூலமாக சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை பறிப்பதே பாஜகவின் நோக்கம்.
இதனால் SIR திட்டத்தை எதிர்த்து திமுக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி SIRஐ ஆதரிக்கிறார். அவருக்கு வேறு வழியில்லை. எதிர்த்தால் அமித்ஷா கோபித்துக் கொள்வார். அமித்ஷாவுக்கு எதிராக மூச்சுவிடுவதற்கே எடப்பாடி பழனிசாமி பயப்படுவார். அதிமுக பாஜகவின் கிளை அமைப்பாகவே செயல்படுகிறது.
ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த செங்கோட்டையன், அவரது கட்டளைக்கு ஏற்ப ஒரு கட்சியில் இணைந்துள்ளார். தற்போது ஓபிஎஸ் சந்தித்து திரும்பி இருக்கிறார். அவர் என்ன உத்தரவை வாங்கி வந்தார் என்பது அவருக்கு தெரியும். ஆனால் SIR பணிகளை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு துரோகம் செய்கிறார்.
அவரின் துரோகம் பட்டியல் எடுத்தால் நீண்டு கொண்டே போகும். அவர் துரோகம் செய்யாத ஒரே ஆள் அமித்ஷா மட்டும்தான். அதேபோல் பாஜக எப்போதும் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளை முடித்துவிட்டு, அந்த இடத்தில் தன் இயக்கத்தை கொண்டு வருவதுதான் அந்த கட்சியின் முழு நேர வேலை. பாஜக வாக்கு திருட்டு மட்டுமல்ல, கட்சித் திருட்டிலும் ஈடுபட்டு வருகிறது. அதிமுகவை பாஜக விழுங்கப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications