விழுப்புரம் அரசு பெண் ஊழியருக்கு வந்த வீடியோ கால்.. நிர்வாணமாக நின்ற வாலிபரால் அதிர்ச்சி!
விழுப்புரம்: தினம் தினம் பல்வேறு நூதன வழிகளில் சைபர் குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில் விழுப்புரத்தில் அரசு பெண் ஊழியரிடம் பணம் கறக்க ஒரு முயற்சி நடந்துள்ளது. விழுப்புரம் அரசு பெண் ஊழியரின் செல்போனுக்கு வந்த வாட்ஸ் அப் காலில், வாலிபர் ஒருவர் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
இணையதளம் வாயிலாக சைபர் குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பணமோசடி, தெரியாத எண்ணை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசுவது என பல்வேறு முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. சைபர் கிரைம் போலீசார் இதுபோன்ற மோசடிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தாலும் இத்தகைய மோசடிகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

வாட்ஸ்-அப் காலில் நிர்வாணமாக வந்த நபர்
தினம் தினம் பல்வேறு நூதன வழிகளில் சைபர் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கின்றன. சில நேரங்களில் முன்பின் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் ஏடாகூடமான நிகழ்வுகளும் நடந்து அதிர வைத்து விடுகின்றன. அப்படியான ஒரு நிகழ்வுதான் விழுப்புரத்தில் அரசு பெண் ஊழியருக்கு ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி தரக்கூடிய இந்த சம்பவத்தை பற்றி பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் அரசு ஊழியர் ஆவார். திருமணம் ஆன இவர் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது அவரது வாட்ஸ் அப்பிற்கு வீடியோ கால் ஒன்று வந்தது. புது எண்ணாக இருந்ததால் அழைப்பை பெண் துண்டித்துவிட்டார். இதையடுத்து மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. இதனால், எரிச்சல் அடைந்த அந்த பெண், வீடியோ அழைப்பை அட்டன் செய்தார்.
உடனே போலீசில் புகார் செய்த பெண்
அடுத்த நொடியே அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீடியோ காலில் வந்த வாலிபர் ஒருவர், தனது உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக தோன்றினார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பெண், தனது கணவரிடம் செல்போனை காண்பித்தார். உடனே வீடியோ காலில் வந்த வாலிபர் அழைப்பை துண்டித்துவிட்டார். உடனடியாக இது தொடர்பாக அரசு பெண் ஊழியர் போலீசில் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
போலீசார் வாட்ஸ் அப் வீடியோ கால் எண்ணை ஆய்வு செய்து அதில் உள்ள எண்ணை வைத்து விசாரித்தனர். விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவான எண்ணில் இருந்து வாட்ஸ் அப் கால் வந்தது கண்டறியப்பட்டது. வாட்ஸ் அப் டிபியில் இந்தி நடிகை ஒருவரின் புகைப்படம் இருந்தது. மோசடியான அழைப்பு என்பதால், உரிய விசாரணை நடத்தி குற்றவாளியைக் கண்டறிய சைபர் கிரைம் போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இப்படி அழைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்
பெண்களின் எண்ணில் நிர்வாணமாக தோன்றி அதை வீடியோ ரெக்கார்டு செய்து மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும், இதனால் முன் பின் தெரியாத எண்களில் இருந்து வீடியோ கால் வந்தால் மிகவும் உஷாராகவும் விழிப்புணர்வாகவும் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
வங்கி ஏடிஎம் எண்ணை வைத்து மோசடி செய்தல், பார்சல் வந்ததாக ஏமாற்றி பணத்தை கறப்பது என தினம் தினம் புதுவித மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது டிஜிட்டல் அரஸ்ட், மார்பிங்க் வீடியோக்களை வைத்து மிரட்டுவது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் செல்போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications