விழுப்புரம் ஆசிரம பாலியல் கொடுமையில் பகீர் உடந்தை.. சிக்கிய நிர்வாகி மனைவி.. மேலும் இருவர் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அறக்கட்டளை நிர்வாகிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி மரியா ஜீபினும் கைது செய்யப்பட்டுள்ளார். மரியாவிடம் விசாரணை நடத்தப்பட்டதில் மேலும் ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டலபுலியூரில் இயங்கி வருகிறது அன்புஜோதி ஆசிரமம். இங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்த ஆசிரமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க வாழ் தமிழர் சலீம் கான் தனது மாமனார் ஜவாஹிருல்லாவை சேர்த்துள்ளார். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் மாமனாரை சந்திக்க சென்றார்.

மாமனார்
அப்போது மாமனார் ஜவாஹிருல்லா அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சலீம் கான், ஆசிரம நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் அவர்களோ எந்த பதிலும் தரவில்லை. இதனால் சலீம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அடுத்து அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு போலீஸார் ,வருவாய் துறை, சமூகநலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கடந்த 10 ஆம் தேதி சோதனை நடத்தினர்.

சோதனை
இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி ஆசிரமம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் உரிய முறையில் பராமரிக்காமல் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆசிரம நிர்வாகி
இதையடுத்து புகாரின்பேரில் ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி, அவரது மனைவி மரியா ஜீபின், ஆசிரம மேலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த ஆசிரமத்திற்கு பூட்டி சீல் வைக்கவும் ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்தவரகளில் 16 பேரை காணவில்லையாம்.

ஆசிரம நிர்வாகி பாலியல் வன்கொடுமை
அந்த ஆசிரமத்தில் இருந்த பெண்களை ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி உள்ளிட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கண்டறியப்பட்டது. இந்த நிலையில் ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி, அவரது மனைவி மரியா ஜீபின், ஆசிரம பணியாளர்கள் பிஜு மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் உள்ளிட்ட 6 பேர் மீது அனுமதியின்றி ஆசிரமம் நடத்தியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வியாபார நோக்கில் கடத்தல்
மேலு் ஆசிரமத்தில் இருந்தவர்களை வியாபார உள்நோக்கத்துடன் வெளிமாநிலத்திற்கு கடத்தியதும் மனநலம் குன்றியோர் ஆதரவற்றோரை அடித்து துன்புறுத்தியதும் தெரியவந்தது. மேற்கண்ட 6 பேர் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ஜீபினும் மரியா ஜீபினும் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கணவருக்கு மனைவி உடந்தை
இந்த நிலையில் நேற்றைய தினம் ஜீபின் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு கணவருக்கு உடந்தையாக இருந்ததாக மனைவி மரியா ஜீபின் செய்யப்பட்டுள்ளார். மரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரம நிர்வாகிகள் சதீஷ், பூபாலன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைதாகியுள்ளனர். இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சிகிச்சை முடிந்ததும் வீட்டுக்கு செல்ல விரும்பினால் அங்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இல்லாவிட்டால் வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications