அரசு பஸ் டிரைவரின் ஒரு கையில் ஸ்டியரிங்.. மறு கையில் பாருங்க.. கிட்ட நெருங்கிய விழித்த விழுப்புரம்
விழுப்புரம்: விழுப்புரம் அரசு பஸ்ஸில் வந்து கொண்டேயிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.. பஸ்ஸிலிருந்த பெண் பயணி ஒருவர், இதனை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் சமீப காலமாகவே, அரசு பஸ்களில் போதிய பாதுகாப்பின்மை நிலவி கொண்டிருக்கிறது.. திருச்சி, விருதுநகர், நாகை என பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ்கள் சேதமாகியதுடன், நாற்காலியுடன் சாலையில் விழுந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன.

திருச்சி: திருச்சியில் ஒருமுறை கண்டக்டர் இருக்கையின் நெட்டு போல்டு திடீரென கழண்டுவிட்டது.. இதனால், சீட்டில் உட்கார்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.. ராஜபாளையத்தில், பஸ்ஸின் பின்பக்க படிகட்டு உடைந்து சாலையின் நடுவே விழுந்தது. நாகையில், பின்பக்க கண்ணாடி இல்லாமலேயே அரசு பஸ் ஒன்று சாலையில் தறிகெட்டு ஓடியது..
இதனால் பயணிகள் அலறி கூச்சலிட்டதையடுத்து, அரசு போக்குவரத்து கழகங்களில் 6 ஆண்டுகள் தாண்டிய, பஸ்களை எல்லாம் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் புதிய பஸ்களை வாங்கி இயக்கப்பட வேண்டும் என்றும், பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும், போக்குவரத்து கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கொந்தளித்தனர்.
அரசு பஸ்கள்: இப்படி அரசு பஸ்களில் பயணிகளுக்கு பாதுகாப்பின்மை நிலவிவரும் நிலையில், பஸ்ஸை ஓட்டுனர்களும் கவனக்குறைவாக இருப்பது அதற்கு மேல் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. செல்போனில் பேசிக்கொண்டே பஸ் ஓட்டும் டிரைவர்கள் மீது நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன.. இதோ இப்போதுகூட ஒரு டிரைவர், செல்போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டே பஸ் ஓட்டுகிறார்.
திருப்பதியிலிருந்து பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று சென்னை மாதவரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ரீல்ஸ் பார்த்தபடியே, கவனக்குறைவாக பஸ்ஸை ஓட்டியிருக்கிறார் டிரைவர்.. இப்படியே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரையிலும், சாலையை கவனிக்காமல் டிரைவர் பஸ் ஓட்டுவதை பார்த்து, பயணிகள் பதறிப்போய்விட்டார்கள்..
புகார்கள்: பஸ்ஸிலிருந்த பெண் பயணி ஒருவர், டிரைவரின் அருகில் வந்து, இதனை வீடியோ எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த வீடியோவை போக்குவரத்து பணிமனையில் உள்ள டிரைவர்களிடம் காண்பித்து, புகாரும் அளித்துள்ளார்.. இந்த வீடியோதான் சோஷியல் மீடியாவில் வெளியாகி பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதையடுத்து, அந்த டிரைவர் நிரந்தர பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்...
இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) செய்திகுறிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.. அதில், "திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது ரீல்ஸ் பார்த்தபடி அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நிரந்தர பணிநிறுத்தம்: இந்த காணொளியில் வரும் ஓட்டுநர் விழுப்புரம் கோட்டம், திருவள்ளூர் மண்டலம், கோயம்பேடு II பணிமனையைச் சார்ந்த தற்காலிக ஓட்டுநர் பார்த்திபன் பணி எண்.Y6116 ஆவார். தவறு செய்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது நிரந்தர பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications