"பயமா.." எதிரிகள் பெயரை கூட நேரடியாக சொல்லாத விஜய்.. என்ன காரணம்! அவரே கொடுத்த அடடே விளக்கம்
விழுப்புரம்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் விஜய் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை மறமுமாக விமர்சித்துப் பேசினார். அதேநேரம் அவர் யாரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை. தனது பேச்சில் ஏன் யாரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்பது குறித்தும் விஜய் கடைசியாக விளக்கம் கொடுத்தார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் பெயர் மற்றும் கொள்கைகளை அறிவித்தார்.

இன்றைய தினம் விழுப்புரம் விக்கிரவாண்டியில் வி. சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற்றது. அதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
விஜய்: இந்த மாநாட்டில் முதலில் கட்சிக் கொள்கைகள், செயல்திட்டம் உள்ளிட்டவை விளக்கப்பட்டது. மாநாட்டில் கடைசியாகப் பேச விஜய் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். தங்கள் கட்சியின் கொள்கை என்ன, வழிகாட்டிகள் யார் என்பது குறித்துப் பேசினார். அதேபோல தனது முதல் அரசியல் மாநாட்டிலேயே அரசியல் கட்சிகளையும் சாடினார்.
மறைமுகமாகத் தாக்கு: குறிப்பாகத் திராவிட மாடல் என்று மக்களை ஏமாற்றுவதாகவும் மத ரீதியான அரசியல் செய்ய வரவில்லை என்றும் பேசினார். மேலும், பல இடங்களில் தற்போது ஆட்சியில் உள்ள கட்சிகளை விமர்சித்தார். அரசியல் எதிரி, கொள்கை எதிரி என்றும் சாடினார். பலரும் திமுக, பாஜக கட்சிகளையே விஜய் விமர்சிப்பதாகக் கூறி வருகிறார்கள். அதேநேரம் விஜய் தனது பேச்சில் யாருடைய பெயரையும் ஏன் நேரடியாகக் குறிப்பிடவில்லை..
ஏன் நேரடியாகக் குறிப்பிடவில்லை: அது குறித்தும் விஜயே தனது பேச்சில் விளக்கியுள்ளார். அதில் அவர், "என்னடா இந்த விஜய் யாருடைய பெயரையும் நேரடியாகச் சொல்லவே மாட்டேன் என்கிறான். யார் பெயரையும் அழுத்தமாகச் சொல்ல மாட்டேன் என்கிறான். இவனுக்கு என்ன பயமா என்று ஒரு சில அரசியல் விஞ்ஞானிகள்.. அரசியல் நையாண்டி செய்வார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் சொல்லும் பதில் ஒன்று தான்.. அவர்கள் பெயரை நான் சொல்ல முடியாமல் இல்லை.. சொல்லாமல் இருந்ததால் தைரியம் இல்லை என்றும் அர்த்தம் இல்லை.
தாக்கி பேச வரவில்லை: அதற்கெல்லாம் ஒரே காரணம் தான். இங்கு யாருடைய பெயரையும் சொல்லி அவர்களைத் தாக்க நாங்கள் அரசியல் களத்திற்கு வரவில்லை. தாக்கி பேசுவது, தரக்குறைவாகப் பேசுவது, மரியாதைக் குறைவாகப் பேசுவது ஆகியவற்றுக்காக நாங்கள் அங்கு அரசியலுக்கு வரவில்லை.
மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து, நல்ல அரசியல் செய்யவே இங்கு வந்துள்ளோம். எங்கள் அரசியல் எதிரியாக இருந்தாலும் சரி, கொள்கை ரீதியான எதிரியாக இருந்தாலும் சரி அவர்களைக் கண்ணியமாகவே விமர்சிப்போம். ஆனால், அந்த விமர்சனங்கள் ஆழமானதாக இருக்கும்" என்றும் அவர் பேசினார்.
விஜய்யின் இந்த மாநாட்டிற்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டனர். மாநாடு நடக்கும் இடத்தின் இரண்டு பக்கமும் மிகப் பெரியளவில் டிராபிக் பாதிப்பு ஏற்பட்டது. பார்க்கிங் நிரம்பிவிட்டதாலும் டிராபிக் பாதிப்பு காரணமாகவும் தொண்டர்கள் பலரும் பல கிமீ தூரம் நடந்தே கூட இந்த மாநாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications