"சுள்ளான் நீ.. அரசியலை உன்னால் சமாளிக்க முடியாது.." ராஜேந்திர பாலாஜி ஆவேசம்! யாரை சொல்கிறார்
விருதுநகர்: அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு சிவகாசியில் நடந்த கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி ஆவேசமாகப் பேசினார். புதிதாகக் கட்சி தொடங்கியவர்களால் 30 நாள் கூட நீடிக்க முடியாது என்ற அவர், சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து அடுத்த எம்ஜிஆர் என்கிறார்கள் என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க அக்கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அதன்படி சிவகாசி திருத்தங்கலில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திமுகவில் வாரிசு அரசியலே இருப்பதாகச் சாடினார். அதேபோல அவர் தனது பேச்சில் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்யையும் மறைமுகமாகச் சீண்டினார்.
கடும் தாக்கு: ராஜேந்திர பாலாஜி பேசுகையில், "நான் ஒரு காலத்தில் எம்ஜிஆர் படங்களுக்கு வால்போஸ்ட்டர் ஒட்டி இருக்கிறேன். அதுதான் எனது முதல் வேலை.. என்னைப் போன்ற பல லட்சம் தொண்டர்களின் வியர்வையிலும், ரத்தத்திலும் மலர்ந்த மலர்தான் அதிமுக என்ற இந்த இயக்கம். இந்த இயக்கத்திற்கு என்று தனியாக ஒரு வரலாறு இருக்கிறது
படத்தில் நடிக்கும் போதே திடீரென ஏதோ நினைப்பு வந்து கால்ஷீட் கொடுத்தது போல்... யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தைப் பேசும் கட்சி அதிமுக இல்லை. இன்னறைக்கு சுள்ளான்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து, நான்தான் அடுத்த எம்ஜிஆர் தான்.. நான் தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை.. இது திராவிட பூமி. இங்கு நீதிக் கட்சி, திக, அதிமுக, திமுக தான்.. இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை.
30 நாட்கள் கூட தாண்ட முடியாது: புதிதாகக் கட்சி தொடங்கியவர்களால் சமாளிக்க முடியாது. மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாது.. சினிமாவில் நீங்கள் வெள்ளி விழா கொண்டாடிய ஹீரோவாக இருக்கலாம்.. ஆனால், அரசியல் கட்சியை உங்களால் 30 நாட்கள் கூட நடத்த முடியாது" என்று விஜய்யை மறைமுகமாக சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், "வரும் சட்டசபைத் தேர்தல் என்பது அதிமுகவுக்கும்- திமுகவுக்கும் இடையில் தான். தமிழ்நாட்டில் பாஜகவும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி களத்திலேயே இல்லை.. திமுகவை வீட்டுக்கு அனுப்பும் சக்தி அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது. திமுகவில் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. அங்கு வாரிசு அரசியல் என்ற கலாச்சார சீர்கேடு உள்ளது. முடிசூடா மன்னர் ஆட்சி போல் தான் திமுகவில் இருக்கிறது.
அதிமுக: அதிமுக இன்று 53 ஆண்டுகளுக்கும் பிறகு விருச்சிகமாக உள்ளது. இதற்குத் தமிழ்நாட்டு மக்களே ஒரே காரணம். தமிழ்நாட்டை 31 வருடங்கள் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையை அதிமுக பெற்றுள்ளது. திமுகவைப் போல வாரிசு அரசியல் எல்லாம் இங்கு இல்லை.. கட்சிக்கு விசுவாசியாக இருந்து உழைத்தால் அனைவருக்கும் படிப்படியாகப் பதவி கிடைக்கும்.
எடப்பாடியை கோட்டைக்கு அனுப்புங்கள்: திமுக ஆட்சி என்பது ஜீரோ தான்.. இதனால் யாருக்கும் எந்தவொரு லாபமும் இல்லை. ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புங்க. அவர் நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்.. எடப்பாடி பழனிசாமியை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்புங்கள். அதிமுக ஆட்சியில் பல திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறோம். ஆனால் திமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை. கேட்டால் டெல்லியில் இருந்து பணம் வரவில்லை என்கின்றனர். 40 எம்பிக்கள் உள்ளனரே.. அவர்கள் கேள்வி கேட்க மாட்டீர்களா?
அதிமுக ஆட்சியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது கடுமையாக வேலை பார்த்தோம். ஆனால் திமுகவில் யாரும் வேலை பார்க்கவில்லை. இந்த முறை ஏதோ மழை பெய்யாததால் வெள்ளத்தில் இருந்து சென்னை தப்பிவிட்டது. திமுக ஆட்சியை விரட்டி அடித்து விட்டு அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். ஏனென்றால் மனிதநேயத்துடன் ஏழை- எளிய மக்களுக்கு உதவும் கட்சி அதிமுக இயக்கம்" என்றார்.












Click it and Unblock the Notifications