விருதுநகரில் மீண்டும் பாரத மாதா சிலை நிறுவப்படும்.. பாஜக தலைவர் அண்ணாமலை பரபர
விருதுநகர்: விருதுநகரில் பாஜக அலுவலகத்தில் வைத்திருந்த பாரதமாதா சிலை அகற்றப்பட்டது. இந்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் உரிய அனுமதி பெற்று விருதுநகரில் பாஜக அலுவலகத்தில் பாரத மாத சிலை நிறுவப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பாக பாஜகவை வலுப்படுத்தும் நோக்கில் தமிழக பாஜக தலைவர் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். ‛என் மண்.. என் மக்கள்' என்ற பெயரிலான பாதயாத்திரையை கடந்த மாதம் 28 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் அண்ணாமலை தொடங்கினார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரம் வருகை தந்து அண்ணாமலையின் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார்.

அண்ணாமலையின் நடைபயணம் விருதுநகர் மாவட்டம் வந்தது. முன்னதாக விருதுநகரில் சாத்தூர் சாலை சந்திப்பு அருகே உள்ள கிழக்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் 5 அடி உயரத்தில் பாரத மாதா சிலை அமைத்து இருந்தனர். ஆனால் இந்த சிலையை பாஜகவினர் வைக்க யாரிடமும் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பாஜக அலுவலகம் சென்று சிலையை அகற்றும்படி நிர்வாகிகளிடம் கூறினர்.
அப்போது, சிலையை பாஜக அலுவலகத்தில் தான் வைத்துள்ளோம். இதனால் அனுமதி என்பது தேவையில்லை எனக்கூறி பாரதமாதா சிலையை அகற்ற நிர்வாகிகள் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் பாரத மாதா சிலையின் மீது துணி சுற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் மறைத்தனர். அதன்பிறகு அந்த சிலையை வருவாய்த்துறையினர் அகற்றி அங்கிருந்து எடுத்து சென்றனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரவோடு இரவாக இந்த சம்பவம் நடந்தது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விருது நகர் தொகுதியோடு இதுவரை 22 சட்டமன்ற தொகுதிகளில் நடைபயணம் நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 5,500 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இதில் 600 மனுக்கள் மத்திய அரசு சர்ந்தவையாகும். இந்த மனுக்களை மத்திய அரசிடம் கொடுக்க உள்ளோம். இதற்காக பாஜகவில் தனிபிரிவு ஏற்படுத்தி மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற அனுமதியுடன் உரிய அனுமதி பெற்று விருதுநகரில் பாஜக அலுவலகத்தில் பாரத மாத சிலை நிறுவப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications