திமுக எம்.பியின் சித்தப்பாவை கொன்றது யார்.. பெண் விவகாரம் காரணமா.. தென்காசியில் பதட்டம்
தென்காசி திமுக எம்பியின் சித்தப்பா கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்
விருதுநகர்: தென்காசி தொகுதி திமுக எம்பியின் சித்தப்பா கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பெண் விவகாரம் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதனால் தென்காசியில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் தென்காசி தொகுதி எம்பி தனுஷ்குமாரின் சித்தப்பா. இவர் ரேசன் கடை எடையாளர்கள் சங்க தலைவர் ஆவார். ஊர் சமுதாய தலைவராகவும் இருந்தவர்.

இவர், நேற்று மாலை வயலுக்கு போவதாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவே இல்லை. இந்நிலையில், இரவு 10 மணியளவில் பிரம்மகுளம் கண்மாய் பகுதியில் கருப்பையா கழுத்து அறுக்கப்பட்டு, சடலமாக கிடந்தார்.
தகவலறிந்து சேத்தூர் போலீசார் விரைந்து வந்து, கருப்பையா உடலை கைப்பற்றினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒருவேளை முன்விரோதம் காரணமாக கருப்பையா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்றும் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் கடந்த மாதம் நடந்த கோயில் திருவிழாவில் சிலர் கருப்பையாவிடம் போதையில் தகராறு செய்துள்ளனர். அவர்களை கருப்பையாதான் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கும்பலை போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதேபோல, பெண்கள் விஷயத்திலும் கருப்பையா கொஞ்சம் கசமுசாவென சொல்லப்படுகிறது. அதனால் பெண் தொடர்பால் கூட இந்த கொலை நடந்திருக்கலாமோ என்றும் சந்தேகம் எழுவதாக தெரிகிறது. எனினும் இந்த கொலை தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதனிடையே, கருப்பையாவின் உறவினர்கள் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு, கொலையாளிகளை விரைந்து பிடிக்க முழக்கம் எழுப்பினர். திமுக எம்பியின் சித்தப்பா கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தினால், தென்காசி தொகுதியில் தேவதானம், ராஜபாளையம் உள்ளிட்ட இடங்களில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications